கடலூர் அரசு சேவை இல்ல பள்ளி விடுதியில் பிளஸ்–1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கடலூர் அரசு சேவை இல்ல பள்ளி விடுதியில் பிளஸ்–1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-06-16 22:00 GMT

கடலூர்,

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகள் பவித்ரா (வயது 16). தாய், தந்தையை இழந்த இவர் நெல்லிக்குப்பம் அண்ணாநகரை சேர்ந்த உறவினர் வள்ளி பராமரிப்பில் இருந்து வருகிறார். கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு சேவை இல்ல மேல் நிலைப்பள்ளி விடுதியில் தங்கி கடந்த 2 ஆண்டுகளாக படித்து வந்தார்.

தற்போது பிளஸ்–1 படித்து வந்த பவித்ரா கடந்த சில நாட்களாக யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்து வந்தார். நேற்று முன்தினம் விடுதியில் உள்ள மாணவிகளுடன் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று காலை படுக்கை அறையில் இருந்த பவித்ராவை காணவில்லை. இதற் கிடையில் அவர் விடுதி அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது பற்றி விடுதி காப்பாளர் ஜெயந்தி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி பவித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு சேவை இல்ல பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்