பட்டியலில் 103 வயது என இருந்த வாக்காளரின் வீட்டுக்கு கலெக்டர் நேரில் சென்று ஆய்வு
வாக்காளர் பட்டியலில் 103 வயது என குறிப்பிடப்பட்டு இருந்த வாக்காளரின் வீட்டுக்கு கலெக்டர் தண்டபாணி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கடலூர்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்காக அவர்கள் அவரவர் வாக்குச்சாவடி எல்லைக்குட்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று, வாக்காளர்களின் விவரங்களை சரிபார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் வயது சரிதானா? என்பதை ஆய்வு செய்யுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த ஆய்வுக்காக 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் எத்தனை பேர் உள்ளனர்? என்ற விவரங்களை சட்டமன்ற தொகுதிவாரியாக சேகரித்து மாவட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்திருந்தது.
இதில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 19 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த 19 பேரில் ஒருவரான கடலூர் அண்ணா நகரைச்சேர்ந்த ஒரு வாக்காளரின் வீட்டுக்கு கலெக்டர் தண்டபாணி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் அந்த வாக்காளரின் வயது 78 என்பதும், வாக்காளர் பட்டியலில் 103 என தவறாக இருப்பதும் தெரியவந்தது. இதனால் அவருடைய வயதை திருத்துவதற்கான படிவம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டது.
இந்த ஆய்வின் போது தாசில்தார் (தேர்தல்) பாலமுருகன், தேர்தல் துணை தாசில்தார்கள் துரைராஜன், ராஜேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.