ராமேசுவரத்தில் வாலிபர் குத்திக்கொலை நண்பர்கள் 4 பேர் கைது

ராமேசுவரத்தில் வாலிபர் குத்திக்குகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-06-16 22:15 GMT

ராமேசுவரம்,

திருப்புவனம் கொத்தன்குளம் கிராமத்தை சேர்ந்த பூவலிங்கம் என்பவருடைய மகன் முனியாண்டி(வயது 32). இவரும், இவருடைய நண்பர்கள் அதே ஊரைச்சேர்ந்த சுப்பிரமணி மகன் அஜித்குமார்(18), ராமு மகன் சிவமணி(19), ராஜாங்கம் மகன் இருளகணேஷ்(18) ஆகியோர் ராமேசுவரம் தெற்கு கரையூரில் வசிக்கும் முனியாண்டியின் சித்தி மாரிமுத்து என்பவர் வீட்டுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தனர்.

இதேபோல கொத்தன்குளத்தை சேர்ந்த அய்யனார்(20) என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு ராமேசுவரம் தெற்கு கரையூரில் வந்து தங்கிஉள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் 5 பேரும் மது அருந்திஉள்ளனர்.

அப்போது குடிபோதையில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அஜித்குமார் என்பவர் தான் வைத்திருந்த வாளால் முனியாண்டியின் வயிற்றில் குத்தினாராம். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அஜித்குமார் உள்பட 4 பேரும் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் முனியாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் திலகராணி, துறைமுக போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் முனியாண்டியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அஜித்குமார், சிவமணி, இருளகணேஷ், அய்யனார் ஆகியோர் மீது வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நண்பர்கள் 5 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளனவாம். இறந்த முனியாண்டி மீதும் ஏராளமான வழக்குகள் உள்ளது என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ராமேசுவரத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்