பாம்பன் குந்துகால் கடற்கரையில் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணி

பாம்பன் குந்துகால் கடற்கரையில் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணியை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்

Update: 2018-06-16 22:45 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப் படுவதும், படகுகளுடன் மீனவர்கள் சிறை பிடிக்கப்படும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இலங்கை கடற்படையின் கெடுபிடியால் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவே செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டு வருகிறது. தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே மத்திய–மாநில அரசுகள் இணைந்து ஆழ்கடல் மீன் பிடிப்பு திட்டத்தை கொண்டுவர தீவிரம் காட்டி வருகின்றன. ஆழ்கடல் மீன் பிடிப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு சார்பில் 750 கோடியும், மாநில அரசு 750 கோடியும் என சேர்த்து மொத்தம் 1,500 கோடி ஆழ்கடல் மீன் பிடிப்பு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுஉள்ளது.

இந்நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் குந்துகால் கடற்கரையில் ஆழ் கடல் மீன்பிடி திட்டத்தின்படி ஆழ் கடல் மீன்பிடி படகுகள் நிறுத்த வசதியாக துறைமுகம் கட்டுவதற்கான பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. அதற்காக குந்துகால் கடற்கரையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்ப துறையின் அமைச்சர் மணிகண்டன் கலந்துகொண்டு துறைமுகம் கட்டுவதற்கான பணியின் தொடக்கமாக செங்கலை எடுத்து வைத்து மாலை அணிவித்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நடராஜன் மற்றும் மீன்துறை அதிகாரிகளும், மீனவ சங்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:–

இலங்கை கடற்படையால் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க இந்த ஆழ்கடல் மீன் பிடிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டுஉள்ளது. இந்த திட்டம் முழுமையாக செயல் பாட்டுக்கு வரும் பட்சத்தில் மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடித்து வர முடியும். ஆழ்கடல் மீன் பிடி படகுகளை நிறுத்த வசதியாக பாம்பன் குந்துகால் கடற் கரையில் ரூ.70 கோடி மதிப்பில் ஆழ்கடல் மீன் பிடி துறைமுகம் கட்டப்பட உள்ளது. அதற்கான பணியை தொடங்கி வைத்துள்ளேன். இந்த துறைமுகம் கட்டும் பணி 1½ வருடத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுஉள்ளது.

பணிகள் முடிந்தபின் இந்த துறைமுக பகுதியில் மட்டும் 450 படகுகளை இங்கு நிறுத்தி வைக்க முடியும். சாயல்குடி அருகே மூக்கையூர் கடற்கரையில் ரூ.113 கோடி மதிப்பில் ஆழ்கடல் மீன் பிடி துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு 70 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. மீனவர்களை பாதுகாக்கக் கூடிய ஒரே அரசு அ.தி.மு.க. அரசு மட்டும் தான். மத்தியஅரசின் சுதேஸ்தர்‌ஷன் திட்டத்தின் கீழ் ரூ.4½ கோடி நிதியில் ஒளி–ஒலி காட்சி கூடம் குந்துகால் கடற்கரையில் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்