18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: 3–வது நீதிபதியை நியமித்து விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் - திருநாவுக்கரசர்

‘18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3–வது நீதிபதியை நியமித்து விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்று கோவையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

Update: 2018-06-16 23:30 GMT

கோவை,

நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பாதையில் நடந்த அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர், நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஊட்டி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அது போதாது. இயற்கை பேரழிவுகளினால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது.

அதுபோல இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும்.

சுற்றுலா தலமான ஊட்டியில் அதிநவீன வசதி கொண்ட பல்நோக்கு சிகிச்சை ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும். ஏனென்றால் இந்தியா முழுவதுமிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகிறார்கள். அவர்கள் விபத்தில் சிக்கினால் சிகிச்சைக்காக பல மணி நேரம் ஆம்புலன்சில் கொண்டு வந்து கோவையில் தான் சேர்க்கப்படுகிறார்கள்.

எனவே ஊட்டியில் பல்நோக்கு சிகிச்சை ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும். அது ஊட்டியில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பலன் அளிக்கும். இதற்காக இந்துஸ்தான் போட்டோ அரங்கை மருத்துவமனையாக மாற்றலாம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை பெற நீதிமன்றத்தைத் தான் நாட வேண்டிய நிலையில் உள்ளனர். ஏனென்றால் அவர்களின் மனுவை ஜனாதிபதி நிராகரித்து விட்டார். இனி அவர்கள் அரசியல் ரீதியாக தீர்வு காண முடியாது.

மகன் சிறையில் உள்ளதால் மன அழுத்தத்தில் அற்புதம்மாள் பேசி பேரறிவாளனை கருணை கொலை செய்ய கூறி இருக்கலாம். கருணை கொலை அங்கீகரிக்கப்படுவது இல்லை.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அவர்கள் எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறார்களா? இல்லையா? என்பதே குழப்பமாக உள்ளது. 18 தொகுதிகளிலும் ஏறத்தாழ 45 லட்சம் வாக்காளர்கள் இருப்பார்கள். அந்த வாக்காளர்களின் தொகுதி மேம்பாடு இதனால் பாதிக்கப்படுகிறது. எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால் தொகுதி வளர்ச்சி நிதி கூட பொதுமக்களுக்கு போய் சேரவில்லை.

எனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதி நீக்க வழக்கு 8 மாதமாக நடைபெற்றது. ஆனால் இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை. எனவே மூன்றாவது நீதிபதியை காலம் தாழ்த்தாமல் நியமித்து விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்