போக்குவரத்து கழக காப்பீட்டு திட்டத்தின் கீழ் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு

‘ஊட்டி மலைப்பாதையில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு போக்குவரத்து கழக காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் வழங்கப்படும்’ என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2018-06-16 22:30 GMT

கோவை,

நீலகிரி மாவட்டம் ஊட்டி–குன்னூர் மலைப்பாதையில் மந்தாடா என்ற இடத்தில் கடந்த 14–ந் தேதி அரசு பஸ் ஒன்று 150 அடி ஆழ பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் பலியானார்கள். காயம் அடைந்த 9 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை பார்த்து ஆறுதல் கூறி இழப்பீடு வழங்குவதற்காக தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்றுமாலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது விபத்தில் காயம் அடைந்தவர்களை அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

அதன்பின்னர் போக்குவரத்து கழக காப்பீட்டு திட்டத்தின் கீழ் விபத்தில் சிக்கி முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட சாந்தி என்ற பெண்ணுக்கு ரூ.5 லட்சமும், பலத்த காயம் அடைந்த நமச்சிவாயம், கணேசன், ராணி, நடராஜ், ஆனந்தன் ஆகிய 5 பேருக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயம் அடைந்த பாலசந்தர், மாரிமுத்து, சுகன்யா ஆகிய 3 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும் என் மொத்தம் ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் இழப்பீடு தொகைக்கான காசோலைகளை 2 அமைச்சர்களும் வழங்கினார்கள்.

அதன்பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஊட்டி மலைப்பாதையில் விபத்து நடந்த உடனேயே சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவ துறையினருக்கு அங்கு விரைந்து செல்ல உத்தரவிட்டார். இதே போல போக்குவரத்து துறை அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதியை முதல்–அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார். உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இங்கு வந்து காயம் அடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க டாக்டர்களை அறிவுறுத்தியுள்ளார்.

முதல்–அமைச்சரின் நிவாரண நிதியை தவிர போக்குவரத்து கழக காப்பீட்டு திட்டத்தின் கீழ் விபத்தில் இறந்தவர்களில் 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.35 லட்சமும், மீதி 2 பேருக்கு அவர்களின் வயதை கணக்கில் கொண்டு தலா ரூ.2½ லட்சம் வீதம் ரூ.5 லட்சம் என மொத்தம் 40 லட்சம் ரூபாய் வழங்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்கான காசோலைகள் நாளை(திங்கட்கிழமை) வழங்கப்படும்.

ஊட்டி மலைப்பாதையில் பழுதடைந்த பஸ்கள் இயக்கப்படவில்லை. தரமான, நல்ல பராமரிப்பு உள்ள பஸ்களை தான் போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. விபத்து என்பது ஒரு நொடியில் நடந்து விடுகிறது. அவ்வாறு விபத்து நடக்க கூடாது என்று தான் போக்குவரத்து துறை சாலை பாதுகாப்பு வாரம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதற்காக டிரைவர்களுக்கு சிறந்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தை குறைக்க வேண்டும், உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்பதால் தான் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் விபத்தில்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருவதால் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன. விபத்துக்களை குறைக்க வேண்டும் என்பதற்காக தான் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா சாலை பாதுகாப்பு நிதிக்காக ரூ.65 கோடி நிதி வழங்கினார்.

விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் நீதிமன்றம் சென்று நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு தான் இழப்பீடு தொகை கிடைக்கும். ஆனால் விபத்தினால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் போக்குவரத்து கழக காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிவாரண நிதி வழங்க முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தான் தற்போது ஊட்டி சாலை விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு முதன்முதலாக இழப்பீடு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்