தூத்துக்குடி கலவரம் தொடர்பாக மேலும் 6 பேர் கைது

தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக மேலும் 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Update: 2018-06-16 20:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக மேலும் 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கலவரம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கடந்த 22–ந் தேதி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பல்வேறு வாகனங்கள், ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்புகளுக்கு தீவைத்தனர். சிலர் கண்காணிப்பு கேமிராக்கள், அரசு அலுவலகங்கள் மீது கல்வீசி தாக்கி சேதப்படுத்தினர்.

இது தொடர்பாக தூத்துக்குடி சிப்காட், தென்பாகம், மத்தியபாகம், வடபாகம், முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதுவரை 250–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளில் மொத்தம் 243 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 186 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 6 பேர்

கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கலவரம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், மத்தியபாகம், சிப்காட் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 6 பேரை போலீசார் நேற்று காலையில் கைது செய்தனர்.

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்த வேல்சாமி மகன் அமல்ராஜ் (வயது 35), தூத்துக்குடி டி.எம்.பி. காலனி 4–வது தெருவை சேர்ந்த சந்தனராஜ் மகன் மாரிமுத்து (24), தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் தேவநாதன் (38), சிப்காட் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக மாப்பிள்ளையூரணியை சேர்ந்த சகாய அற்புதம் மகன் ஜெபமாலை (22), தூத்துக்குடி முருகேசன் நகரை சேர்ந்த ராமசாமி மகன் திருமாறன் (47), துரைசாமி மகன் முத்துகுமார் (39) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்