சங்கரன்கோவிலில் சாயப்பட்டறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சங்கரன்கோவிலில் சாயப் பட்டறை தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.;

Update: 2018-06-16 21:00 GMT

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவிலில் சாயப் பட்டறை தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

சாயப்பட்டறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் வீடு சார்ந்த சிறு விசைத்தறியாளர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படும். அதன்படி கடந்த 2016–ம் ஆண்டு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த 28.4.2018 அன்றுடன் காலாவதியாகி விட்டது. இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீத கூலி உயர்வு மற்றும் தேசிய விடுப்பு சம்பளம் ரூ.300 வழங்கக்கோரி கடந்த ஏப்ரல் 30–ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 8–ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில், அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கு 19 சதவீத கூலி உயர்வும், சிறு விசைத்தறியாளர்களுக்கு 17 சதவீத கூலி உயர்வும், தேசிய விடுப்பு சம்பளமாக ரூ.220–ம் வழங்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து 40 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் மறுநாள் கடந்த 9–ம் தேதி முதல் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நூலுக்கு சாயம் போடும் சாயப்பட்டறை தொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு திரும்பவில்லை.

பேச்சுவார்த்தை

சங்கரன்கோவிலில் சுமார் 50–க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன. இதில் உள்ள தொழிலாளர்கள் நூலுக்கு சாயம் போடுவதை தொடர்ந்தே துணி உற்பத்தி தொடர்பான அனைத்து பணிகளும் நடக்கும். இந்நிலையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 19 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து தங்களுக்கு 30 சதவீத கூலி உயர்வு வழங்கக்கோரி அவர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் நூல் தட்டுப்பாடு ஏற்பட்டு, விசைத்தறிக்கு பாவு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள், சிறுவிசைத்தறியாளர்கள் மீண்டும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் சாயப்பட்டறைகளுக்கான ஊதிய உயர்வு குறித்து சங்கரன்கோவில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில், சாயப்பட்டறை தொழிலாளர்களுக்கு 22 சதவீதம் கூலி உயர்வு கொடுப்பதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்ததை தொடர்ந்து சாயப்பட்டறை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

மேலும் செய்திகள்