பா.ஜனதா சார்பில் விவசாயிகளின் பிரச்சினைகளை அறிய 6 குழுக்கள்

பா.ஜனதா சார்பில், விவசாயிகளின் பிரச்சினைகளை அறிய 6 குழுக்களை எடியூரப்பா அமைத்துள்ளார்.

Update: 2018-06-15 23:38 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ளார். தான் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதாக கூறி இருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாய கடனை தள்ளுபடி செய்வதில் சில கட்டுப்பாடுகளை விதிக்க குமாரசாமி முடிவு செய்துள்ளார். விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் விவசாயிகளின் பிரச்சினைகளை அறிய 6 குழுக்களை பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா அமைத்துள்ளார். பா.ஜனதா மாநில விவசாய அணி தலைவர் லட்சுமண் சவதி, நிர்வாகிகள் சங்கர் பட்டீல், ஈஸ்வர் சந்திர ஒசமணி, நஞ்சுண்டேகவுடா, பவித்ரா ராமய்யா, சிவபிரசாத் ஆகியோரது தலைமையில் தனித்தனியாக 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த குழுக்களில் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த குழுவினருக்கு ஒவ்வொரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து கொள்வார்கள். பின்னர் அவர்கள் அறிக்கை தயாரித்து எடியூரப்பாவிடம் தாக்கல் செய்வார்கள்.

இந்த குழுவினர் வருகிற 30-ந் தேதி தங்களின் பயணத்தை தொடங்கி ஜூலை 15-ந் தேதி நிறைவு செய்கிறார்கள். அதன் பிறகு கூட்டணி ஆட்சிக்கு எதிராக தீவிரமாக போராட்டம் நடத்த எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்