சிமெண்டு தயாரிக்க அரியலூர் செல்லும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள்

வேலூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் சிமெண்டு தயாரிப்புக்காக தினமும் 10 டன் வீதம் அரியலூருக்கு அனுப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-06-15 23:07 GMT
வேலூர்,

வேலூர் மாநகராட்சியில் ஒரு நாளைக்கு 200 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் முதலில் வேலூரை அடுத்த சதுப்பேரி பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. ஆனால் அங்கு இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், குழந்தைகள், முதியவர்கள் நோயால் பாதிக்கப்படுவதாகவும் கூறி குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் சதுப்பேரியில் குப்பை கொட்டுவதற்கு பசுமை தீர்ப்பாயம் தடைவிதித்தது. அதைத்தொடர்ந்து வேலூர் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டது. மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வருகிறார்கள். அவர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து சேகரித்து வருகிறார்கள். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழிவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மறுசுழற்சி செய்யமுடியாத, மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை சிமெண்டு தயாரிப்புக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரியலூரில் உள்ள சிமெண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்கு மாநகராட்சி நிர்வாக ஆணையர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். அதைத்தொடர்ந்து வேலூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மக்காத தன்மை கொண்ட, எரியும் தன்மைகொண்ட பிளாஸ்டிக் கழிவுகளை ஒருநாளைக்கு 10 டன் வீதம் அரியலூருக்கு அனுப்ப வேலூர் மாநகராட்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அரியலூரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பி உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் விஜயக்குமார் கூறுகையில் “மக்காத தன்மைகொண்ட, எரியும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கழிவுகளை அரியலூரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்ப ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி ஒருநாளைக்கு 10 டன் கழிவுகள் அனுப்பப்படும்” என்றார்.

மேலும் செய்திகள்