முனியப்பன் கோவிலில் விழுந்த ராட்சத மரம்: ஒன்றரை மாதமாக ஒரே இடத்தில் கிடப்பதால் பக்தர்கள் சிரமம்

ஒன்றரை மாதமாக ஒரே இடத்தில் கிடப்பதால் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.;

Update: 2018-06-15 23:30 GMT
ராசிபுரம்,

வடுகம் முனியப்பம்பாளையத்தில் முனியப்பன் கோவிலில் விழுந்து, ஒன்றரை மாதமாக ஒரே இடத்தில் கிடக்கும் ராட்சத மரத்தால் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த மரத்தை உடனே அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ராசிபுரம் அருகே உள்ள வடுகம் முனியப்பம்பாளையத்தில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள காட்டுப்பகுதியில் பழமையான அனக்காட்டு முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 சிறிய முனியப்பன் சாமி சிலைகள் உள்ளன. வடுகம் முனியப்பம்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒரு குடும்பத்தில் முதல் குழந்தை பிறந்தவுடன் முனியப்பன் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த கோவிலில் சாமி சிலைகள் வீரி மரத்தடியில் இருந்து வந்தன. கட்டிடம் எதுவும் இல்லை. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வாரத்தில் வரும் புதன்கிழமை பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். வாரத்தில் புதன்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வடுகம் முனியப்பம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் 150 ஆண்டுகளுக்கு மேலான ராட்சத வீரி மரம் ஒன்று கோவில் வளாகத்தில் இருந்து வந்தது. இந்த மரம் கடந்த மே மாதம் 1-ந் தேதி அந்த பகுதியில் அடித்த பலத்த காற்றில் அடியோடு சாய்ந்து விழுந்தது. இந்த மரம் விழுந்த சம்பவத்தை பற்றி கேள்விப்பட்டதும் வருவாய்த் துறையினர் வந்து பார்வையிட்டு சென்றனர். வீரி மரம் சாய்ந்து விழுந்ததில் கோவிலில் உள்ள சாமி சிலைகளை மறைத்த வண்ணம் உள்ளது.

இந்த மரத்தை சம்பந்தபட்ட அதிகாரிகள் அகற்ற தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டு இருப்பதால் பக்தர்கள், பொதுமக்கள் முனியப்பன் சாமியை தரிசிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். பெண்கள் சாமி கும்பிட முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சாமி சிலைகளை மறைத்த வண்ணம் விழுந்து கிடக்கும் அந்த ராட்சத மரத்தை உடனடியாக அப்புறப்படுத்தி பக்தர்கள் சாமி கும்பிட வசதி செய்து தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்