மத்திய அரசுடன் நாராயணசாமி மோதலால் மாநிலத்தின் வளர்ச்சி ஒட்டுமொத்தமாக பாதிப்பு, பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் குற்றச்சாட்டு
நாராயணசாமியின் மத்திய அரசுடனான மோதல் போக்கினால் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது என்று மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த முதல்–அமைச்சர் நாராயணசாமி புதுவை மாநிலத்துக்கு ஒரு தீர்ப்பு, தமிழகத்திற்கு ஒரு தீர்ப்பா? என்று கேட்டுள்ளார். 3 நியமன எம்.எல்.ஏ.க்களை ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்ட விதிகளுக்குட்பட்டு மத்திய உள்துறை நியமித்துள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என்று ஐகோர்ட்டும் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் இரு நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்பை புதுச்சேரி அரசுக்கு வழங்கி உள்ளனர்.
அத்தகைய தீர்ப்பை மதிக்காத முதல்–அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் ஆகியோர் ஜனநாயகம், நீதி, நேர்மை பற்றி பேச தகுதியற்றவர்கள். முதல்–அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக காங்கிரஸ் மேலிடம் சொல்லும் எல்லா உத்தரவிற்கும் தலை ஆட்டும் பொம்மையாக நாராயணசாமி செயல்பட்டு வருகிறார். புதுவை மாநிலத்தை மிகவும் பின்தங்கிய மாநிலமாக மாற்றி பெருமை முதல்–அமைச்சர் நாராயணசாமியையே சேரும்.
கவர்னரிடம் பொதுமக்கள் யாராவது வாட்ஸ் அப்பில் புகார் அளித்தால் அமைச்சர்கள் சொல்லாமல் புகாரை எடுக்கக் கூடாது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். மக்கள் அளிக்கும் பெரும்பாலான புகார்கள் ஆளுங்கட்சியினர் சம்பந்தப்பட்ட நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, ஏ.டி.எம். மோசடி போன்றவைகளாக இருக்கும்போது மக்கள் யாரிடம் போய் புகார் அளிப்பார்கள்?
எனவே கவர்னரிடம் வாட்ஸ் அப்பில் புகார் அளித்தால் அதை எடுக்கக்கூடாது என்று கூறியுள்ளதை பாரதீய ஜனதா வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசுடனான மோதல் போக்கினால் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி முடங்கிப்போய் உள்ளது. அவர் மத்திய மந்திரியாக இருந்தபோதும், எம்.பி.யாக இருந்தபோதும், தற்போது முதல்–அமைச்சராக இருக்கும் நிலையிலும் மாநில வளர்ச்சிக்கு தடையாகவே இருந்து வருகிறார். மக்களின் உணர்வுகள், துன்பங்களை அறியாத அவரது செயல் இந்த மாநிலத்திற்கு விரோதமானது.
இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.