மயிலாடுதுறை தொழில் முனைவோரிடம் பிரதமர் மோடி, காணொலிக் காட்சி மூலம் உரையாடினார்

மயிலாடுதுறை தொழில் முனைவோரிடம் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். அப்போது அவர், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறினார்.

Update: 2018-06-15 23:30 GMT
மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் மயிலாடுதுறையில் ‘ஐமார்க் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ‘சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க் ஆப் இந்தியா’ என்ற நிறுவனம் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் இந்திய அளவில் ஒரு சில தொழில்முனைவோரிடம் பேசுவதற்கு நேற்று ஏற்பாடு செய்து இருந்தது.

இதில் மயிலாடுதுறையை சேர்ந்த தொழில்முனைவோரான சுரேசும் ஒருவர் ஆவார். அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு பிரதமர் மோடி, காணொலிக் காட்சி மூலம் சுரேசை தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது பிரதமர், வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? என்று தமிழில் பேச ஆரம்பித்தார். பின்னர் அவர், ஆங்கிலத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட 3 லட்சத்திற்கும் மேலான பொது சேவை மையங்கள் மூலம் பொதுமக்களுக்கான சேவைகள் டிஜிட்டல் முறையில் எளிதாக கிடைக்க பெற்றது. மேலும் அதன் மூலம் வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி பொதுமக்களுக்கு குறிப்பாக ஊரக மற்றும் கிராமப்புற மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காகவே பொது சேவை மையம் மூலம் கொண்டு வரப்பட்டது.

தற்போது பொது சேவை மையங்கள் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வது, போன் பில் செலுத்துவது, மின்சார கட்டணம் செலுத்துவது உள்பட பலவற்றை பொதுமக்களுக்கு அலைச்சல் இல்லாமல், சிரமப்படாமல் செய்து கொள்ள முடிகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது குறிப்பிட்ட ஒரு சிலருக்கானது என்ற நிலையை மாற்றி பாமர மக்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்க வழிவகை காணப்பட்டுள்ளது. இவ்வாறுஅவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சி குறித்து தொழில் முனைவோர் சுரேஷ் கூறியதாவது:-

கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் நான், எனது நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இந்த நிறுவனத்தில் மயிலாடுதுறை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 450 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 90 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். பிரதமர் நரேந்திரமோடியுடன் கலந்துரையாடியபோது அவரது பேச்சு கிராமப்புற பெண்கள் மேம்பாட்டில் எங்களது பணியை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது. இதேபோல் எங்கள் நிறுவனம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும் வகையில் முன்னெடுத்து செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்