சீரான குடிநீர் வழங்க புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை

தினத்தந்தி செய்தி எதிரொலியாக, சாட்டியக்குடி சமத்துவபுரம் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்க புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2018-06-15 23:00 GMT
கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றிலும் தற்போது உப்பு நீராக வருவதால் இந்த தண்ணீரையும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள ஊராட்சி பகுதிகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மக்கள் கீழ்வேளூர் பகுதியில் இருந்து சாட்டியக்குடி வழியாக தலைஞாயிறு பகுதிக்கு செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உள்ள இணைப்பு பகுதியில் இருந்து ஒழுகும் தண்ணீரை பிடிக்கும் அவலநிலையில் இருந்து வந்தனர். எனவே, இந்த பகுதிக்கு தேவையான சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து செய்தி தினத்தந்தி நாளிதழில் கடந்த 13-ந்தேதி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மோகன், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் அன்பரசு, அருள்மொழி, சாட்டியக்குடி ஊராட்சி செயலாளர் கணேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சமத்துவபுரத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரமுள்ள வலத்தாமங்கலம் என்ற இடத்தில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து அங்கிருந்து சீரான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இடத்தில்தான் ஏற்கனவே ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தண்ணீர் பிரச்சினை குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்து அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்