சென்னை மாவட்டத்தில் பணிபுரிய விரும்பும் அலுவலர்களுடன் கலந்தாய்வு

சென்னை மாவட்டத்தில் பணிபுரிய விரும்பும் அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

Update: 2018-06-15 23:15 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் கூறியதாவது.

திருவள்ளூர் மாவட்டத்தின் அம்பத்தூர் வருவாய் கோட்டத்தை சேர்ந்த திருவொற்றியூர், மாதவரம், மதுரவாயல், அம்பத்தூர் வட்டத்தை சேர்ந்த கிராமங்கள் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உகந்தவாறு விரிவாக்கம் செய்யப்படும். இதற்கான அரசாணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையால் கடந்த 4-1-2018 அன்று வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்யப்படும் சென்னை மாவட்டத்தில் பணிபுரிய விரும்பும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் அது தொடர்பான விருப்ப மனுவினை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பான அனைத்து நிலை பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது.

சென்னை மாவட்ட வருவாய் அலகில் பணிபுரிய விரும்பும் பணியாளர்கள் தங்களது விருப்ப கடிதத்தை வருகிற 28-ந் தேதிக்குள் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5¾ மணி வரை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், வருவாய் ஆர்.டி.ஓ.க்கள், தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், அரசு பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்