ரெகுநாதபுரம் அருகே பழிக்குப்பழியாக வியாபாரி கொலை
ரெகுநாதபுரம் அருகே வியாபாரி கொலை 2 நாட்களுக்கு முன்னர் ஓட்டல் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக நடந்துள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் வாலாந்தரவை அருகே உள்ள தெற்கூர் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு என்பவரின் மகன் கிருஷ்ணன்(வயது 56). இவர் நேற்று முன்தினம் ரெகுநாதபுரம் மேலூர் பகுதியில் மதுக்கடையின் அருகில் குத்தி கொலை செய்யப்பட்டார். தெற்கூர் பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் கட்டைபோஸ்(35) என்பவருடன் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது.
மேலும் இந்த தகராறின்போது குடிபோதையில் தவறிவிழுந்து படுகாயமடைந்த கட்டைபோஸ் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் 2 நாட்களுக்கு முன்னர் தெற்கூர் பகுதியில் ஓட்டல் தொழிலாளி சிவக்குமார் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக கொலை செய்யப்பட்ட கிருஷ்ணனின் அண்ணன் சாமி அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர்.
இதில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:– சாமி மற்றும் கொலை செய்யப்பட்ட கிருஷ்ணன், தெற்குக்காட்டூரை சேர்ந்த ரகுபதி, வழுதூரை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் மர வியாபாரத்திற்காக மரங்கள் வாங்க ரெகுநாதபுரம் மேலூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்களாம்.
அப்போது அந்த மதுக்கடை அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த கட்டைபோஸ் தனது சித்தப்பா மகன் சிவக்குமாரை, கிருஷ்ணனின் உறவினர் வைத்தீசுவரன் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டதாகவும், அதற்கு பழிவாங்காமல் விடமாட்டேன் என்று கூறி பீர்பாட்டிலால் கிருஷ்ணனை தாக்கினாராம்.
மேலும் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை கண்டு தடுக்க ஓடிவந்தவர்களை அவர் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார். குடிபோதையில் இருந்ததால் தப்பிச்செல்லும்போது அந்த பகுதியில் இருந்த மின்கம்பத்தில் அடிபட்டு படுகாயம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் கட்டைபோசை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர் என்ற விவரம் தெரியவந்துள்ளது.
பலியான கிருஷ்ணனின் உடல் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர். அப்போது அங்கு கைதிகளுக்கான சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த கட்டைபோசை கண்டதும் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அந்த வார்டுக்குள் செல்ல முயன்றனர். இதனால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆஸ்பத்திரியில் இருந்த ஜன்னல் கதவு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களை கலைந்து செல்ல வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.