பெரும்பாறை அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

கொடைக்கானல் கீழ்மலைக்கிராமமான பெரும்பாறை அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-15 21:45 GMT

கன்னிவாடி,

கொடைக்கானல் கீழ்மலைக்கிராமமான பெரும்பாறை அருகே ஆடலூர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்தும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்று தெரிகிறது. மேலும் மலைக்கிராமங்களுக்கு பழுதடைந்த பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்தநிலையில் தங்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வார காலத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்