வடகாடு மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்

வடகாடு மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2018-06-15 22:00 GMT

சத்திரப்பட்டி,

ஒட்டன்சத்திரம் வனப்பகுதி 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு யானை, காட்டெருமை, கடமான், சிறுத்தை, புலி, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. இவற்றில் சில விலங்குகள் உணவு, தண்ணீருக்காக அடிக்கடி குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன.

இதுகுறித்து தகவலறியும் வனத்துறையினர் விரைந்து சென்று வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வடகாடு அருகே, பால்கடை மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘பால்கடை பகுதியை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் நடைபயிற்சி மேற்கொண்ட போது மலைப்பகுதியில் உள்ள பாறை மீது ஒரு சிறுத்தை இருப்பதை பார்த்துள்ளார். உடனே வீட்டுக்கு திரும்பிய அவர் எங்களிடம் இதுகுறித்து தெரிவித்தார். இதனால் நாங்கள் அச்சமடைந்துள்ளோம்.

அதேபோல் பரப்பலாறு அணைப்பகுதியிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் எங்களால் இரவு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியில் செல்லவே அச்சமாக உள்ளது. வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம். எனவே வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அதனை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்