சென்னையில் வழிப்பறியை தடுக்க இரவில் ரோந்து பணி கமிஷனரே நேரடியாக ஆய்வு

சென்னையில் வழிப்பறி குற்றங்களை தடுப்பதற்காக போலீசார் தினமும் இரவு ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபடுகிறார்கள். போலீசாரின் ரோந்து பணியை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்தார்.

Update: 2018-06-15 23:30 GMT
சென்னை,

சென்னையில் வழிப்பறி கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் தினமும் இரவு ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள். இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை ஒரு குழுவினரும், அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை இன்னொரு குழுவினரும் இரண்டு ‘ஷிப்ட்’களாக ரோந்து பணி புரிகின்றனர்.

மேலும் தினமும் இரவு வாகன சோதனை நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக களத்தில் இறங்கி போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதையும், வாகன சோதனை நடத்துவதையும் ஆய்வு செய்தார். கடற்கரை காமராஜர் சாலை, சென்டிரல் ரெயில் நிலைய பகுதி, கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, கிண்டி, அடையாறு ஆகிய பகுதிகளில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது. சென்னையில் இரவு நேரத்தில் தற்போது 150 இடங்களில் வாகன சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைப்பணியில் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுவரை நடந்த சோதனையில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளிடம் வாகனங்களை மடக்கி போலீசார் விசாரித்துள்ளனர்.

இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாத சுமார் 600 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வழிப்பறி கொள்ளையர்கள், பழைய குற்றவாளிகள் உள்பட 3,500-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த சோதனை நடவடிக்கையாலும், ரோந்து பணியாலும் சென்னையில் குற்றச்சம்பவங்கள் குறைந்தவண்ணம் உள்ளது. இந்த சோதனை நடவடிக்கை அடுத்த 15 நாட்களுக்கு தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்