61 நாள் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்

61 நாள் மீன் பிடி தடைக்காலம் முடிவடைந்ததையொட்டி நேற்று அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

Update: 2018-06-15 21:30 GMT
திருவொற்றியூர்,

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக்கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த கால கட்டத்தில் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் குஞ்சுகள் வலையில் சிக்கி வீணாகி விடும். இதனால் படிப்படியாக கடலில் மீன்வளம் குறையும்.

எனவே தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை செய்யப்பட்டு உள்ளது. மீன்பிடி தடைக்காலத்தில் மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் தமிழக அரசு சார்பில் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்கிய 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.

சென்னை காசிமேடு மீன் பிடித்துறைமுகத்தில் சுமார் 1,200 விசைப்படகுகள் கடந்த திங்கட்கிழமை முதலே கடலுக்குள் செல்ல தயார்படுத்தும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். படகுகளை அடையாளம் காண மீன்வளத்துறை மூலம் வழங்கப்பட்டு உள்ள பதிவு எண்களை படகுகளில் பொருத்தும் பணியிலும் ஈடுபட்டனர். காசிமேடு பகுதியில் 15 ஐஸ் பேக்டரிகள் மட்டுமே உள்ளதால் 200 பார் முதல் 700 பார் வரையிலான ஐஸ்கட்டிகளை விசைப்படகுகளில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் நவீன எந்திரம் மூலம் நிரப்பி வந்தனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததையடுத்து இந்த படகுகள் மற்றும் மீன்பிடி கப்பல்கள் மூலம் மீனவர்கள் நேற்று அதிகாலை முதலே கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். 5 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை மீனவர்கள் கடலுக்குள் தங்கி இருந்து மீன் பிடித்து விட்டு கரை திரும்புவார்கள்.

அதுவரை படகுகளுக்கு தேவையான டீசல் மற்றும் ஒரு விசைப்படகில் 6 முதல் 15 மீனவர்கள் வரை சென்று மீன் பிடிக்க செல்வார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான சமையல் பொருட்களை எடுத்து சென்றனர்.

61 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடலுக்குள் செல்வதாலும், இந்த ஆண்டு இருந்து வந்த சீரான வானிலையால் வங்கக்கடல் பகுதியில் மீன்வளம் அதிகரித்து இருக்க வாய்ப்புள்ளது என்பதாலும் மீன்கள் அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து மீனவர்கள் மிகவும் உற்சாகத்துடன் கடலுக்குள் சென்று உள்ளனர்.

தற்போது மீன்கள் எங்கு அதிகமாக காணப்படுகின்றது என்பதை நவீன கருவிகள் மூலம் மீனவர்கள் அறிந்து, அந்த இடத்தில் சென்று மீன்களை பிடித்து வருவதால் மீன் பிரியர்கள் விரும்பி சாப்பிடும் வஞ்சிரம், வவ்வால், சங்கரா, நண்டு, இறால் போன்ற மீன்களை 10 நாட்களுக்குள் பிடித்து கொண்டு கரை திரும்புவார்கள்.

மேலும் விசைப்படகில் செல்லும் மீனவர்கள் ஒருவருக்கு ஒருவர் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், ஆபத்து காலங்களில் உதவி கோரவும் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் விசை படகுகளில் ‘வயர்லெஸ்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வெகு தொலைவில் வரும் கப்பல்களையும் தொடர்பு கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அதிகளவில் மீன்கள் கிடைத்தால் அது குறித்து பிற விசைப்படகு மீனவர்களுக்கும் தகவல் தெரிவித்து அவர்களை அங்கு வரவழைக்கும் வசதி கிடைத்து உள்ளது.

இதற்கிடையில் தடைக்காலம் முடிந்து நேற்று காலை கடலில் ஒரு நாள், 2 நாட்கள் தங்கி இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள், அதிகளவில் கடம்பா மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் நேற்று மதியமே கரைக்கு திரும்பி வந்து விட்டனர்.

இதனால் மற்ற கரையோர மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் கடந்த வாரம் வரை கிலோ ரூ.900 வரை விற்கப்பட்ட வஞ்சிரம், வவ்வால் மீன்களின் விலை இனிமேல் குறைய வாய்ப்பு உள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் உள்ள குடிநீர், மளிகை பொருட்கள் உள்ளிட்ட கடைகளில் 61 நாட்களுக்கு பிறகு வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

மேலும் செய்திகள்