61 நாட்கள் தடைக்காலம் முடிந்தது கடலூர் மீனவர்கள், மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு படகுகளில் சென்றனர்
61 நாட்கள் தடைக்காலம் முடிவடைந்ததையடுத்து கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு படகுகளில் சென்றனர். முன்னதாக அவர்கள் கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, சோனாங்குப்பம், தாழங்குடா, ராசாப்பேட்டை, சொத்திக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் கடந்த ஏப்ரல் மாதம் 15–ந்தேதி முதல் ஜூன் 15–ந்தேதி வரையிலான 61 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க அரசு தடை விதித்தது. இந்த மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி படகுகளை சீரமைத்து, வர்ணம் தீட்டுதல், மீன்பிடி வலைகளை சரிசெய்தல், புதிய வலைகளை பின்னுதல் போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே நேற்று முன்தினம் முதல் கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்த பணிகளில் ஈடுபட்டனர். துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் டீசல் நிரப்புதல், மீன்களை பதப்படுத்துவதற்காக ஐஸ்கட்டிகளை ஏற்றுதல், மீன்பிடிக்க தேவையான வலைகளை ஏற்றுதல், ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு பொருட்களை ஏற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து நேற்று அதிகாலையிலேயே மீனவர்கள் தங்களது படகுகளுக்கு வந்தனர். அங்கு கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் தங்களது தெய்வங்களை வழிபட்டனர். பின்னர் உற்சாகமாக மீன்பிடிக்க மீனவர்கள் புறப்பட்டனர்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்ததால் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் மீனவ கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இரு கிராமத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று காலையில் இருந்தே பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். எனவே இரு கிராம மீனவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக கடலூர் துறைமுகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், 4 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி இருந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். கடல் சீற்றம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பைபர் படகில் கடலுக்கு செல்பவர்கள் மட்டும் செல்லவில்லை. சிலர் கடற்கரையோரத்தில் மீன்பிடித்தனர். எனவே துறைமுகத்துக்கு குறைந்த அளவே மீன்கள் வந்துள்ளன. வரும் நாட்களில் துறைமுகத்துக்கு மீன்களின் வரத்து அதிகரிக்கும் என்றார்.