சிங்கோனா எஸ்டேட் பகுதியில் சிறுத்தைப்புலியை பிடிக்கக்கோரி முற்றுகை போராட்டம்
வால்பாறையி சிங்கோனா எஸ்டேட் பகுதியில் தொடரும் சிறுத்தைப்புலி தாக்குதலை தடுக்கக்கோரி தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி உடனடியாக 2 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.
வால்பாறை,
வால்பாறை அருகே உள்ள அரசு தேயிலைத் தோட்டக்கழகம் (டேன்டீ) நிர்வாகத்திற்கு சொந்தமான சிங்கோனா எஸ்டேட் பகுதியை சுற்றி பெரியகல்லார், சின்னக்கல்லார், ரயான், நீரார் உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகள் வனப்பகுதிகளை சூழ்ந்த இடங்களில் அமைந்துள்ளன. இந்த எஸ்டேட் பகுதியில் கடந்த 21 நாட்களுக்குள் ஒரு சிறுமி உள்பட 3 பெண்களை சிறுத்தைப்புலி தாக்கியது.
இதில் நேற்று முன்தினம் சிங்கோனா எஸ்டேட் முதல்பிரிவு பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளி மாதவி (வயது 35) வீட்டின் முன்னால் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது சிறுத்தைப்புலி தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளார். எனவே சிங்கோனா, பெரியகல்லார் உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து சிறுத்தைப்புலி பெண் தொழிலாளர்களை தாக்கும் சம்பவம் நடைபெற்று வருவதால் தொழிலாளர்கள் ஆத்திரமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து வேலையை புறக்கணித்து டேன்டீ டிவிசன் அலுவலத்தில் நிர்வாக இயக்குனர் சீனிவாசரெட்டி, டிவிசனல் மேலாளர் சிவக்குமார், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் சேகர் ஆகியோரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நிர்வாக இயக்குனரிடம், எங்களுக்கு சிறுத்தைப்புலி தாக்குதலிலிருந்து டேன்டீ நிர்வாகம் சார்பில் உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் நடமாடிவரும் சிறுத்தைப்புலியை கூண்டுவைத்து பிடிப்பதற்கு மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினரை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
இவர்களிடம் டேன்டீ நிர்வாக இயக்குனர் சீனிவாசரெட்டி, மாவட்ட வனஅலுவலர் மாரிமுத்து, வால்பாறை தாசில்தார் சியாமளாதேவி, வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பிரமணி, டேன்டீ டிவிசனல் மேலாளர் சிவக்குமார், தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது, அ.தி.மு.க. நகர செயலாளர் மயில்கணேசன், முன்னாள் கவுன்சிலர் சுதாகர், தி.மு.க. தொழிற்சங்க தலைவர் சவுந்தரபாண்டியன், விடுதலைசிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் வீரமணி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது மாவட்ட வனஅலுவலர் மாரிமுத்து, உடனடியாக இரண்டு இடங்களில் கூண்டுவைத்து சிறுத்தைப்புலியை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர் டேன்டீ நிர்வாக இயக்குனர் முன்னிலையில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு இறைச்சியும் கூண்டில் கட்டிவைக்கப்பட்டு வேட்டைத்தடுப்பு காவலர்களை பணியமர்த்தி கண்காணிப்பு பணிமேற்கொள்ளப்பட்டது. சாலை வசதிகள் செய்வதற்கும், தொழிலாளர்களை ஒரே பகுதியில் கூட்டமாக குடியமர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளி மாதவிக்கு வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசுவின் கோரிக்கையை ஏற்று நகராட்சிகளின் நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவின்படி சிறப்பு மருத்துவ குழுவினரை கொண்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மாதவிக்கு அரசு சார்பில் கிடைக்கவேண்டிய அனைத்து உதவிகளையும் பெற்றுத்தரப்படும் என்றும் தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் நிர்வாக இயக்குனரும் அதிகாரிகளும் கொடுத்த வாக்குறுதிகளை ஏற்றுக் கொள்கிறோம். இவைகளை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த பகுதியில் நடமாடிவரும் சிறுத்தைப்புலியை பிடிக்கும் வரை நாங்கள் யாரும் வேலைக்கு செல்லமாட்டேம் என்று கூறி தொடர்ந்து டிவிசனல் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.