கோவை பட்டணம்புதூர் பகுதியில் நுரை பொங்கி செல்லும் நொய்யல் ஆறு

கோவை பட்டணம்புதூர் பகுதியில் நொய்யல் ஆறு நுரை பொங்கி செல்கிறது. எனவே கழிவுநீர் கலப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-06-15 23:15 GMT

கோவை,

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, மத்வராயபுரம், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், பேரூர் வழியாக கோவை மாநகர பகுதிக்குள் வந்து சேருகிறது. பின்னர் பட்டணம்புதூர், சூலூர் வழியாக திருப்பூர் மாவட்டத்துக்குள் சென்று, பின்னர் ஈரோடு மாவட்டம் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் கலக்கிறது.

பேரூர் பெரியமகள் பொங்கி வந்தால்தான் காவிரி ஆற்றுக்கே சிறப்பு என்ற சொலவடை உண்டு. அந்த அளவுக்கு நொய்யல் ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்று வந்தது. தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் சென்று வந்தாலும், சில இடங்களில் நுரை பொங்க தண்ணீர் செல்கிறது. இதற்கு ஆற்றில் அதிகளவில் கழிவுநீர் கலப்பதுதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக கோவை அருகே உள்ள பட்டணம்புதூர் தடுப்பணையில் நொய்யல் ஆற்றில் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நுரை பொங்கிய படிதான் தண்ணீர் செல்கிறது. மேலும் அந்தப்பகுதியில் காற்று வேகமாக வீசுவதால், அந்த நுரை காற்றில் பறக்கிறது. அந்த நுரையை பார்க்கும்போது வெள்ளை நிறத்தில் பஞ்சுபோன்று இருப்பதால் மேகமூட்டம்தான் தரைக்கு வந்து இறங்கிவிட்டதோ என்றும் நினைக்க தோன்றுகிறது.

இதற்கு முக்கிய காரணம் கழிவுநீர் அதிகளவில் ஆற்றில் கலப்பதுதான். இந்த தண்ணீர் தான் நீலாம்பூர் குளம், ஆச்சான்குளம், சூலூரில் உள்ள பெரிய மற்றும் சிறிய குளம் ஆகிய குளங்களுக்கு செல்கிறது. இதன் காரணமாக அந்த குளத்தில் உள்ள தண்ணீரை பயன்படுத்துபவர்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாய நிலை நிலவி வருகிறது. பஞ்சுபோன்று இருக்கும் அந்த நுரையை சிறுவர்கள் கையில் எடுத்து விளையாடுகிறார்கள். மேலும் இந்த நுரை அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுவதால் அவர்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

கோவையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த குளங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சில குளங்களுக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களில் முட்புதர்கள் நிறைந்து அடைத்து இருந்தன. அவற்றை சரிசெய்ததால், தற்போது குளங்களுக்கு தண்ணீர் வேகமாக வந்து கொண்டு இருக்கிறது. அவற்றை சரிசெய்த அதிகாரிகள் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குறிப்பாக நொய்யல் ஆற்றில் பேரூர் வரை சுத்தமான தண்ணீர்தான் வருகிறது. அந்த ஆறு கோவை மாநகர பகுதிக்குள் வரும்போது தான் ஆற்றில் அதிகளவில் கழிவுநீர் கலக்கிறது. கோவையில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு, கழிவுநீரை சுத்திகரிப்பு செய்துதான் வெளியிடுகிறோம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். அப்படி இருந்தால் ஏன் ஆற்றில் கழிவுநீர் செல்கிறது?. எனவே பெயரளவுக்கு மட்டும்தான் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல், அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இதன் காரணமாகத்தான் தெளிந்த தண்ணீர் சென்று கொண்டு இருந்த நொய்யல் ஆறு சாக்கடை செல்லும் கூவமாக மாறிவிட்டது. பெரும்பாலும் எல்லா சாக்கடை கால்வாய்களும் ஆற்றில்தான் கலக்கின்றன. கோவை ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளதால், இந்த ஆற்றை சுத்தமாக மாற்ற நல்ல வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதை அதிகாரிகள் சரியாக பயன்படுத்திக்கொண்டு ஆற்றின் ஓரத்தில் வாய்க்கால் அமைத்து அதில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தால் நிரந்தர தீர்வு காண முடியும். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுபோன்று நாகராஜபுரத்தில் உள்ள வாய்க்காலில் சாயக்கழிவுநீர் கலப்பதால் அந்த தண்ணீர் நுரை பொங்கி செல்கிறது. எனவே அந்த வாய்க்காலில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்