தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் திடீர் சாலை மறியல் கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, கடலுக்கு மீன்பிடிக்க செல்ல விசைப்படகு உரிமையாளர்கள் முடிவு செய்து உள்ளனர்.
விசைப்படகுதூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 71 விசைப்படகுகள் பதிவு செய்யப்பட்டும், 20 மீட்டர் நீளத்துக்கு மேல் உள்ள 163 படகுகள் பதிவு செய்யப்படாமலும் இயங்கி வந்தன. கடந்த செப்டம்பர் மாதம் முதல் பதிவு செய்யப்படாத படகுகள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் 10 மாதங்களாக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் முடங்கி இருந்தனர். இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து நேற்று முதல் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தூத்துக்குடி ஆழ்கடல் விசைப்படகு மீன்பிடி மேம்பாட்டு சங்கத்தினர் ஐகோர்ட்டில் ஒரு உத்தரவு பெற்று உள்ளனர். அதில் மத்திய கப்பல் துறை உதவியுடன் மீன்வளத்துறை உதவி இயக்குனர் படகுகளை தற்காலிகமாக பதிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
சாலை மறியல்இந்த உத்தரவு அடிப்படையில் விசைப்படகு உரிமையாளர்கள் தங்கள் படகுகளுக்கு தற்காலிக பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும். தடைக்காலத்துக்கு பிறகு தங்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மீன்வளத்துறை அதிகாரிகள் தற்காலிக பதிவு சான்றிதழ் வழங்கவில்லை.
இதனால் விசைப்படகு உரிமையாளர்கள் நேற்று காலையில் மீன்பிடி துறைமுகம் முன்பு திரண்டனர். அவர்கள் தெற்கு பீச் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைஇது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தாசில்தார் சிவகாமசுந்தரி, நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், இன்ஸ்பெக்டர்கள் முத்து, பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து உரிமையாளர்களை பேச்சுவார்த்தைக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர், உதவி இயக்குனர் சிவராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர் சங்கம், அன்னை தெரசா மீனவர் சங்கத்தினர் முதலில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அதிகாரிகள் தரப்பில் 24 மீட்டர் நீளமும், 240 எச்.பி. திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட விசைப்படகுகளை பதிவு செய்வதற்கு அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. அதனை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கி கூறப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட விசைப்படகு உரிமையாளர்கள் கடலுக்கு செல்வதாக அறிவித்தனர்.
இது குறித்து தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் கூறும் போது, அரசு ஒரு அரசாணை பிறப்பித்து உள்ளது. அந்த ஆணையின் அடிப்படையிலும் அரசு அதிகாரிகள் உத்தரவின் பேரிலும் வரும் வாரங்களில் வழக்கம்போல் தொழிலுக்கு செல்ல தயாராக இருக்கிறோம். அதிகாரிகளும் எங்களை அனுப்புவதற்கு தயாராக இருக்கிறார்கள். திங்கட்கிழமை முதல் புதன்கிழமைக்குள் அனைத்து படகுகளும் கடலுக்கு செல்லும். அரசு சட்டதிட்டம் கொண்டு வந்து உள்ளது. அதனை ஏற்றுக் கொண்டு கடலுக்கு செல்வோம் என்று கூறினர்.
நல்ல முடிவுஅதன்பிறகு தூத்துக்குடி ஆழ்கடல் விசைப்படகு மீன்பிடி மேம்பாட்டு சங்கத்தினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விசைப்படகு உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பின்னர் தூத்துக்குடி ஆழ்கடல் விசைப்படகு மீன்பிடி மேம்பாட்டு சங்கத்தை சேர்ந்த போஸ்கோ கூறும் போது, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பு செல்வதற்காக 10 ஆண்டுகளாக பட்டினி போராட்டம், சட்டப்போராட்டம் நடத்தி உள்ளோம். சட்டத்தின்படி ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. கோர்ட்டு அனுமதி வழங்கியும் மீன்வளத்துறை அதிகாரிகள் எங்களுக்கு அனுமதி மறுத்ததால் மாவட்ட கலெக்டரை சந்தித்தோம். அவர் எங்கள் கோரிக்கையை கேட்டறிந்தார். வருகிற திங்கட்கிழமைக்குள் நல்ல முடிவை தருவதாக உத்தரவாதம் கொடுத்து உள்ளார். திங்கட்கிழமைக்கு மேல் புதிதாக வந்த அரசாரணையின்படி 24 மீட்டர் வரை உள்ள படகுகள் சுமார் 40 படகுகள் உள்ளன. ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு தகுதியான 100–க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. புதிய அரசாணைப்படி படகுகளை மீன்பிடித்தலுக்கு அனுப்பினால் எங்கள் விசைப்படகுகளும் கடலுக்கு செல்லும் என்பதை கலெக்டரிடம் தெரிவித்து உள்ளோம்.
பிரச்சினை இல்லைஇந்த படகுகள் மூலம் நேரடியாக 5 ஆயிரம் குடும்பமும், மறைமுகமாக 10 ஆயிரம் குடும்பங்களும் பயன்பெற்று வருகின்றனர். தூத்துக்குடியில் மீன்பிடி தொழில் முடங்கி உள்ளது. மீனவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை கூட நடத்த முடியாமல் நிறுத்தி வைத்து உள்ளனர். ஆகையால் மாவட்ட கலெக்டர் நல்ல முடிவு தருவார்கள் என்ற நம்பிக்கையோடு இங்கிருந்து செல்கிறோம். நாட்டுப்படகு மீனவர்களுக்கும், விசைப்படகு மீனவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அவர்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகள். அவர்கள் 12 கடல் மைல் தொலைவுக்குள் மீன்பிடிக்கிறார்கள். நாங்கள் அதற்கு மேல் சென்று தான் வலையையே விரிப்போம். காலை 6 மணிக்கு சென்று விட்டு இரவு 9 மணிக்கு திரும்பி வந்து விடுவோம். இதனால் வலை கிழிப்போ, விபத்துக்கோ வாய்ப்பு இல்லை. நாட்டுப்படகுக்கும், விசைப்படகுக்கும் உள்ள பிரச்சினை என்று கூறுவது வதந்தி என்று கூறினார்.
கலெக்டர் பேட்டிஇது குறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறும் போது, 24 மீட்டர் நீளம், 240 எச்.பி.திறன் கொண்ட விசைப்படகுகள் பதிவு செய்ய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி அந்த அளவு கொண்ட விசைப்படகுகளை பதிவு செய்ய அறிவுறுத்தி உள்ளோம். அவர்கள் கடலுக்கு செல்லலாம். அவர்கள் பதிவு செய்து விட்டு கடலுக்கு செல்லலாம். மற்ற படகுகளுக்கு கோர்ட்டு உத்தரவுப்படி மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்தார்.