மான், காட்டு பூனையை வேட்டையாடிய 4 பேர் கைது

திருவண்ணாமலை சுற்றுவட்டார வனப்பகுதியில் மான், காட்டு பூனையை வேட்டையாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-14 23:19 GMT
திருவண்ணாமலை,

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, சாத்தனூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மான், முயல், காட்டு பூனை மற்றும் கோட்டான் ஆகியவற்றை சிலர் வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் அர்ச்சனா கல்யாணிக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திருவண்ணாமலை வனசரகர் மனோகரன், போளூர் வனசரகர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில், 30 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் காஞ்சி ரோடு, கவத்தி மலை காப்பு காடு, ஆவூர் பிரிவு, ராதாபுரம் பூமாலை பிரிவு பகுதியில் உள்ள வனப்பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது மான், காட்டு பூனை, கோட்டான் ஆகியவற்றை வேட்டையாடிய ஜமுனாமரத்தூர் வேடந்தோப்பு பகுதியை சேர்ந்த அசோக்குமார் (வயது 34), தண்டராம்பட்டு தொண்டைமாத்தூர் பகுதியை சேர்ந்த ராஜதுரை (21), பிரசாந்த் (25), சதாகுப்பத்தை சேர்ந்த மரியப்பன் என்கிற ராஜா (43) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இறந்த நிலையில் மான், காட்டு பூனை, கோட்டான் மற்றும் 2 நாட்டு துப்பாக்கி, 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்