எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் அரசு தத்தளிக்கிறது திருச்சி சிவா எம்.பி. பேட்டி

யூனியன் பிரதேசத்தில் கவர்னரின் அதிகாரத்தால் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் அரசு தத்தளிக்கிறது என்று திருச்சி சிவா எம்.பி. கூறினார்.

Update: 2018-06-14 22:48 GMT
புதுச்சேரி,

உருளையன்பேட்டை தொகுதியில் 2016-17ம் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது. தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. சி.பி. திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். விழாவில் மாணவ, மாணவிகளுக்கு தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. பரிசுகளை வழங்கினார்.

எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தங்க நாணயம், கைகடிகாரம், சுவர் கடிகாரம், ஸ்கூல்பேக் உள்பட 7 பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதேபோல் 3 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் 7 பரிசுப்பொருட்களும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டன.

விழா முடிவில் திருச்சி சிவா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

ஆந்திர மாநிலத்தில் ரூ.1,500 கோடி மதிப்பில் 2 பெரிய நதிகளை இணைத்து ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தை பாசன நிலமாக மாற்றியும், குடிநீருக்காகவும் வழி செய்துள்ளனர். ஆனால் ரூ.50 கோடி வருமானத்திற்காக சென்னை நகரத்திற்கான குடிநீர் பஞ்சத்தை தீர்க்க தமிழக அரசு முன்வரவில்லை.

தமிழகத்தில் ஆட்சியாளர்களுக்கு மக்களின் மீது கருணை இல்லை, தொழிலாளர் மீது அக்கறை இல்லை. ஏழை மக்களின் வாழ்வாரத்தை முன்னேற்ற திட்டங்கள் எதுவும் இல்லை. பொம்மை அரசாங்கம் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்கள் இனியாவது விழிப்புணர்வு அடைய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியை மாற்ற பொதுமக்கள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும். கர்நாடக அரசு இதுவரை காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களை நியமிக்காதது குறித்து வெளிப்படையாக மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுத்தால்தான் அது நிரந்தர தீர்வாக இருக்கும். யூனியன் பிரதேசத்தில் கவர்னர் தனக்கு தான் அதிகாரம் முழுவதும் இருப்பதாக நடந்து கொள்வதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் தத்தளிக்கிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரிய சட்டதிருத்தம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்