கத்தியை காட்டி மிரட்டி சினிமா தயாரிப்பாளரின் கார் கடத்தல்

டிரைவரை கத்தியை காட்டி மிரட்டி, சினிமா தயாரிப்பாளரின் காரை கடத்திச்சென்ற 5 பேர் கும்பலை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-06-15 00:00 GMT
பூந்தமல்லி,

திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள வீட்டில் வசித்து வருபவர் ராமச்சந்திரன் (வயது 72). சினிமா தயாரிப்பாளரான இவர், கன்னட நடிகராகவும் உள்ளார். இவரிடம் கார் டிரைவராக வேலை செய்து வருபவர் சந்திரன் (23).

நேற்று முன்தினம் இரவு வெளியூரில் இருந்து ரெயிலில் வரும் ராமச்சந்திரனின் உறவினர்களை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக டிரைவர் சந்திரன், சென்டிரல் ரெயில் நிலையம் செல்வதற்காக வீட்டில் இருந்து காரை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.

வீட்டுக்கு வெளியே பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டி காரை நிறுத்திவிட்டு, உள்ளே அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், காரின் இருபுறமும் நின்று கொண்டு நசரத்பேட்டை எப்படி செல்ல வேண்டும்? என்று டிரைவர் சந்திரனிடம் வழி கேட்பது போல் நடித்தனர்.

அப்போது அவர்களில் ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்திரனை மிரட்டினார். இதனால் பயந்துபோன அவர், காரில் இருந்து கீழே இறங்கி தயாரிப்பாளரின் வீட்டுக்குள் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அந்த மர்ம கும்பல், அந்த காரை அங்கிருந்து கடத்திச்சென்று விட்டனர்.

இது குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், தயாரிப்பாளர் ராமச்சந்திரன் வீட்டின் முன்பு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர்.

அதில் சாலையில் நடந்து வரும் 5 பேர், கார் டிரைவரை மிரட்டி காரை கடத்திச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகளை வைத்து கார் கடத்தல் ஆசாமிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் அந்த காரின் பதிவெண்ணை அனைத்து சோதனை சாவடிகள் மற்றும் அருகில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் போலீசார் அனுப்பி வைத்து உள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாங்காட்டில் கால் டாக்சி டிரைவரை தாக்கி மர்மநபர் கள் காரை கடத்திச்சென்றனர். தற்போது சினிமா தயாரிப்பாளரின் கார் கடத்தப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் தொடரும் இந்த குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்