பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்தது.

Update: 2018-06-13 23:00 GMT
பவானிசாகர்,

தென்னிந்தியாவில் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி ஆகும். இதில் 15 அடி சேறும், சகதியும் போக அணையின் நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீராதாரமாகவும் உள்ளது.

இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்ட மலைகள் உள்ளன. அங்கு மழை பொழியும்போது பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பி உபரிநீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 380 கனஅடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 63.14 அடியாக இருந்தது. நேற்று மதியம் 12 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு 15 ஆயிரத்து 828 கன அடி தண்ணீர் வந்தது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 66.79 அடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 200 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில் வருகிற ஆகஸ்டு மாதம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் உயிர்நீர் திறக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளதால் இந்த ஆண்டு உயிர்நீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

மேலும் செய்திகள்