சின்னசேலம் அருகே பெண் கழுத்தை அறுத்து கொலை: தப்பி ஓட முயன்ற 2 பேரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்

சின்னசேலம் அருகே பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓட முயன்ற 2 பேரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

Update: 2018-06-10 22:30 GMT

சின்னசேலம்,

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கூகையூரை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 52) விவசாயி. இவரது மனைவி சரோஜா(47). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் தண்டபாணி(26), சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அய்யாக்கண்ணு, அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது சம்பந்தமாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். இதையடுத்து சரோஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தண்டபாணி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் ராஜா என்பவருடன் தண்டபாணி தனது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு பூட்டிக் கிடந்தது.

இதனால் அவர் நீண்ட நேரமாக கதவை தட்டி பார்த்தார். இருப்பினும் கதவு திறக்கப்படவில்லை. இந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க 2 பேர், சரோஜாவின் வீட்டில் இருந்து உருட்டுக்கட்டையுடன் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தண்டபாணியும், ராஜாவும் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த 2 பேரும் அவர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து தண்டபாணி திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் விரட்டிச் சென்று பிடித்தனர்.

பின்னர் பொதுமக்கள், பிடிபட்ட 2 பேரையும் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதற்கிடையே தண்டபாணி தனது வீட்டுக்குள் சென்றார். அப்போது அங்கு சரோஜா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து திடுக்கிட்ட தண்டபாணி தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுபற்றி தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், பெரம்பலூர் மாவட்டம் நூத்தப்பூர் பகுதியை சேர்ந்த குழந்தைவேல் மகன் கெப்பன்(40), வீராசாமி மகன் சங்கர்(39) என்பதும், சரோஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், சரோஜா வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட கெப்பனும், சங்கரும் அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு, கட்டிலில் படுத்திருந்த சரோஜாவின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றுள்ளனர். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் கூச்சல் போட்டுள்ளார்.

இதனால் அவர்கள் 2 பேரும் சரோஜாவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை திருடியுள்ளனர். இதையடுத்து வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்ற போது, சென்னையில் இருந்து வந்த தண்டபாணி, கதவை தட்டியதால், அவரை தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர். பின்னர் அவர் பொதுமக்கள் உதவியுடன் 2 பேரையும் பிடித்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கெப்பனையும், சங்கரையும் கைது செய்தனர். நகைக்காக பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்