கடல்: அள்ளித்தரும் அமுதசுரபி

நாளை (ஜூன் 8-ந்தேதி) உலக கடல் தினம்.

Update: 2018-06-07 06:09 GMT
தொடங்குமிடம் எது? முடியுமிடம் எது? என்று எதுவுமற்று இந்த உயிர்க்கோளத்தை சுற்றி வியாபித்திருக்கும் நீர்க்கோளம் தான் கடல். இன்றைய காலகட்டத்தில் எதனுடைய தோற்றத்தையும் அறிவியலால் அறியும் நாம், அதன் துணைகொண்டே கடல் தோன்றியதையும் அறிகிறோம்.

சுமார் 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த உலகத்தில் வாயுக்களே நிறைந்திருந்தன. பூமியின் வெப்பநிலை 212 டிகிரி பாரன்ஹீட்டுக்கு வந்தபோது வாயுக்கள் தண்ணீராக மாறி பூமியின் பள்ளங்களில் நிறைந்து கொண்டன. இதுவே கடல் தோன்றிய முறை.

நமது சங்ககாலங்களில் இருந்தே கடல் என்பது முக்கியமான ஒன்றாக இருந்துவருகிறது. கடலில் இருந்து கிடைக்கும் முத்தும் பவளமும், ஆடம்பரமான பொருள்களென்று மன்னரின் சிம்மாசனத்தையும் அரண்மனை கருவூலத்தையும் அலங்கரித்துள்ளன. கடற்படை வைத்திருந்ததையே மிகப்பெரிய பெருமையாகவும், பாதுகாப்பாகவும் உணர்ந்து வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.

இதே கடல்தான் பலவகைகளில் மனிதனுக்கும் இந்த உலகிற்கும் உதவி வருகிறது. மீனவர்களுக்கு வாழ்வாதாரமாகவும், வணிகத்தின் மூலம் பல்வேறு தொழில்புரிபவர்களுக்கு சரக்குகளை கொண்டு வரும் போக்குவரத்திற்கும், பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா எனவும் இந்தக்கடல் பலருக்கும் பலவிதங்களில் உதவிகரமாய் இருக்கிறது.

உலக அளவில் புரதச்சத்து பங்களிப்பில் கடல் உணவுகள் 16 சதவீதமாக உள்ளன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உலகப் பொருளாதாரத்தில் கடல்சார் தொழில்களின் பங்களிப்பு மட்டும் ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு நடக்கின்றன.

இந்த பூமியின் இயற்கைச் சமநிலையிலும், பருவநிலை மாற்றத்திலும் கடலின் பங்கு இன்றியமையாதது. கடலின் அருகில் வாழ்பவராயினும், கடலை விட்டு நீண்ட தூரத்தில் வாழ்பவராயினும் தான் சுவாசிக்கும் மூச்சிலும், அனைத்து இடங்களிலும் பெய்கின்ற மழையிலும் கடலின் பங்கு இன்றியமையாதது.

கார்பனை உள்ளிழுத்து, நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை வெளியிடுவதில் கடலும் முக்கிய பங்காற்றுகிறது. இறால், நண்டு, மீன் மற்றும் இன்னபிற உணவு பொருட்களையும், உப்பு, மணல் மற்றும் சில மாங்கனீசு பொருட்கள் போன்ற கனிமங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

பரந்து விரிந்த கடல்தான் மனிதவாழ்விற்கு பொக்கிஷமாக இருந்து வருகிறது. நாமும் நமது தலைமுறையினரும் நன்றாக வாழ நாம் பாதுகாக்க வேண்டிய இயற்கை வளத்தில் கடல் முக்கிய இடத்தில் இருக்கிறது.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கடல் மாசடைந்து வருகிறது என்ற செய்தி உண்மையில் வருத்தத்தை மட்டுமல்ல, பயத்தையும் ஏற்படுத்துகிறது.

கடல் மாசடைவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அள்ள அள்ள கொடுத்ததால், மனிதனின் பேராசை அதிகரித்து, அந்தப் பேராசை கடலின் இயற்கைச் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பேராசையற்ற மீன்பிடி இருந்தவரை இதன் தாக்கம் பெரிதாக இல்லை. ஆனால் மீன்பிடியில் வரும் வருமானமும், கடலுக்குள்ளே இருக்கும் பலவகையான உயிரினங்களும் வருமானம் மட்டுமே பார்க்கும் உத்தியாக பலருக்கு தெரிந்தது.

பெருநிறுவனங்கள் கூட மீன்பிடியில் இறங்கியதால் அழிவு ஆரம்பித்தது. முறையற்ற மீன்பிடியால், வளர்ச்சியடையாத கடல்வாழ் உயிரினங்களை கூட பிடிக்க தொடங்கியதால் கடல்வாழ் உயிரினங்கள் கொஞ்சம் வேகமாக அழிந்து வருகின்றன. பூமியில் இருக்கும் உணவுச்சங்கிலி எவ்வளவு முக்கியமோ, அதைப்போலவே கடலிலும் உணவுச்சங்கிலி மிக முக்கியமானதாகும். ஆனால், இந்த முறையற்ற மீன்பிடி கடலின் உணவுச்சங்கிலியை உடைத்தெறிவதாக இருக்கிறது.

அதற்கும் மேல், கடல் மாசடைவதற்கான காரணிகளில் மிக முக்கிய பங்கை அளிப்பவை, ஆலைக்கழிவுகள். பல்வேறு வகையான ஆலைக்கழிவுகள் நேரடியாக கடலில் கலக்கப்படுகின்றன. தனியார் தொழிற்சாலைகள் மட்டுமன்றி, அரசு முன்னெடுக்கும் திட்டங்களும் கடலை சேதப்படுத்துவதாகவே அமைகின்றன.

கடலில் கழிவுகள் கலக்கப்படுவதால் அந்த இடத்தில் கடல்வாழ் உயிரினங்கள் வாழமுடியாமல் போவதுடன், கடலும் மாசுபடுத்தப்படுகிறது. எனவே கடற்கரையோரங்களில் திட்டமிடப்படும் எந்தவொரு திட்டங்களும் கடலையும் கடற்புரத்தையும் சேதப்படுத்தாமலே இருக்க வேண்டும். இவை தவிர கடலில் கலக்கும் எண்ணெய்க்கழிவுகள், சுற்றுலா பகுதிகளில் நாம் வீசியெறியும் குப்பைகள் மற்றும் பலவகையில் கடலை மாசுபடுத்த நாமும் காரணமாயிருக்கிறோம்.

கடல் மாசுபடுவதைக் கணக்கிட்ட சமீப ஆய்வு, 40 சதவீத அளவில் கடல் மாசடைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக மக்கள் தொகையில் சரிபாதி மக்கள் கடற்கரை அருகிலேயே வாழ்பவர்கள் என்பதால், கடல் மாசுபாடு என்பது மனித வாழ்விற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

இந்தக் கடல் என்பது நமது உயிர்க்கோளத்தின் உயிர்நாடி. கடலை நாம் எந்த அளவு நன்றாக பராமரிக்கிறோமோ அந்த அளவிற்கு நமக்கு நோயற்ற வாழ்வாகவும், உணவாகவும், தொழிலாகவும் மற்றும் சுற்றுலா என்ற பெயரில் ஆனந்தத்தையும் திரும்பத் தருகிறது.

அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையிலோ அல்லது கடலின் அருமை பற்றி தெரியாமல் சீரழிப்பதாலோ ஏற்படும் அழிவுகள், நம்மைவிட நம் சந்ததிக்கே அதிகம். நாம் நமது சந்ததிக்கு பணம், பொருளை விட, அழகான மற்றும் சுத்தமான பூமியை விட்டுச் செல்வது நம் கடமையாகும்.

எனவே, அள்ளித்தரும் அமுதசுரபியான கடலின் அருமையை புரிந்துகொள்வதுடன், கடல் மாசடைவதைத் தடுக்க நம்மால் முடிந்த முயற்சியையும் செய்ய வேண்டியது அவசியம்.

- எழுத்தாளர் ஜான்பிரபு

மேலும் செய்திகள்