இணைய தந்தையின் பிறந்த நாள்

உலகம் இன்று கோலிக் குண்டுபோல உங்கள் ஸ்மார்ட்போன் வழியே சுழன்று கொண்டிருக்கிறது என்றால் அது இணைய தந்தை டிம் பெர்னர்ஸ் லீ உருவாக்கிய இணையத்தின் சாதனைதான்.;

Update: 2018-06-07 05:34 GMT
டிம் பெர்னர்ஸ் லீ இங்கிலாந்து நாட்டுக்காரர். 1955-ல் பிறந்த அவர் நாளை தனது 63-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இயற்பியல் பட்டதாரியாக தன் வாழ்க்கைப் பாதையைத் தொடங்கிய அவர், இணையதளத்தை கண்டுபிடித்தது வியப்புக்குரியது.

தனது 34 வயதில், 1988-ல், ஐரோப்பிய ஆய்வுக்கூடமான ‘செர்ன்’ ஆய்வகத்தில் பணியாற்றியபோது இணையத்தை உருவாக்கும் உத்வேகம் பெற்றார். நல்ல கணினி அறிவு பெற்றிருந்த அவர், உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு பொதுவான கணினி தளத்தை உருவாக்க விரும்பினார்.

இயற்பியல் ஆய்வுக்கூடமான செர்ன், கணினி ஆய்வுக்கு அனுமதி வழங்குமா? என்பதில் அவருக்கு தயக்கம் இருந்தது. இருந்தாலும் தனது திட்டத்தை மேலதிகாரியான மைக் செண்டலிடம் முன் வைத்தார். திட்டத்தின் நோக்கத்தையும், சிறப்பையும் புரிந்து கொண்ட அந்த அதிகாரி, மேலிடத்தில் இதை ஏற்க மாட்டார்கள் என்பதையும் நன்கு உணர்ந்திருந்தார். அதனால் தங்கள் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் உலகமெங்கிலும் இருந்து தொடர்பு கொள்ள ஏதுவாக கணினி தொடர்பு போன் தளத்தை உருவாக்குவதாக திட்டம் சமர்ப்பித்து ஒப்புதல் வாங்கிக் கொடுத்தார்.

டிம் பெர்னர்ஸின் கனவு, அவரது மேலதிகாரியின் சாதுர்யமான ஒத்துழைப்பால் நிறைவேறி 1989-ம் ஆண்டு மார்ச் 12-ந்தேதி இணையம் பிறந்தது. செர்ன் ஆய்வகத்துக்காக அவர் உருவாக்கிய தகவல் தொடர்பு தளம் ‘என்கொயரி’ எனப்பட்டது. 1990-ல் அதை ‘வையக விரிவு வலை’ (www) எனும் பொது பயன்பாட்டு தளமாக மாற்றி உலகிற்கு அறிமுகம் செய்தார் லீ.

இப்போது இணையத்திற்கு 29 வயதாகிறது. இணையம் இன்று உலகையே ஆள்கிறது. சொல்லப்போனால் வையமே அந்த வலைத்தளத்திற்குள் சிக்கிக் கொண்டது என்றே கூறலாம். இணையம் எத்தனை வசதிகளை உருவாக்கியிருக்கிறதோ, அவ்வளவு சிக்கல்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இணையத்தால், எதிர்காலம் சைபர் குற்றங்களின் பூமியாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதே நிஜம். இதனால் இணைய தந்தையே கவலைப்படுகிறார். எனவே, நாம் இணையத்தின் சாதக, பாதகங்களை உணர்ந்து நன்மைக்காக அதை பயன்படுத்துவோம்! நாளை (ஜூன் 8-ந்தேதி) டிம் பெர்னர்ஸ் லீயின் பிறந்த நாள்.

-விழி 

மேலும் செய்திகள்