வீரபாண்டி அருகே பனியன் குடோனில் தீ விபத்து: 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

திருப்பூர் அருகே பனியன் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை தீயணைப்பு படைகள் 3 மணி நேரம் போராடி அணைத்தனர்.

Update: 2018-06-06 23:57 GMT
வீரபாண்டி, 

திருப்பூர் வீரபாண்டியை அடுத்த கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவர் செல்லம் நகர் பகவதி அம்மன் கோவில் அருகே பனியன் குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் தொழிலாளர்கள் 6 பேர் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பனியன் குடோனில் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டனர். பின்னர் வேலை முடிந்ததும் இரவு 9 மணிக்கு வழக்கம் போல் குடோனை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு புகை வெளியேறியது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத் தனர். இதையடுத்து அந்த பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு திருப்பூர் மற்றும் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ மள மளவென்று அனைத்து பகுதிக்கும் பரவியது. இதனால் குடோனின் சுவரை இடித்து தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் இருக்க கூடுதலாக தண்ணீர் லாரிகள் வரவழைக் கப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் போராடி தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பனியன்கள் எரிந்து நாசமானது.

இந்த தீவிபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்