பல்லடம் அருகே ஓட்டல் உரிமையாளர் மீது கல்லை போட்டு கொலை செய்ய முயற்சி: உறவினரை போலீசார் தேடி வருகிறார்கள்
பல்லடம் அருகே ஓட்டல் உரிமையாளர் மீது ஹாலோ பிளாக் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற உறவினரை போலீசார் தேடிவருகிறார்கள்.
பல்லடம்,
பல்லடம் அருகே ஓட்டல் உரிமையாளர் மீது ஹாலோ பிளாக் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற உறவினரை போலீசார் தேடிவருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தேவகோட்டை அருகே உள்ள இரவியமங்கலத்தை சேர்ந்தவர் தனபாலன் (வயது 27). இவர் பல்லடம் அருகே அருள்புரத்தில் வாடகை வீட்டில் தங்கி அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய ஓட்டலில் தூத்துக்குடியை சேர்ந்த ராஜா என்பவர் மாஸ்டராகவும், தனபாலனின் உறவினரான சிவக்குமார் என்பவரும் வேலை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாவின் செல்போனை, சிவக்குமார் திருடியதாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட தனபாலன், சிவக்குமாரை எச்சரித்ததோடு, வேலையை விட்டு நிறுத்தி விடுவதாகவும் கூறினார். இதனால் தனபாலனுக்கும், சிவக்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் ஓட்டலில் படுத்து தூங்கிய தனபாலன், நேற்று காலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி நிலையில் கிடந்தார். அவர் அருகே ஹாலோ பிளாக் கல் ஒன்றும் கிடந்தது. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து, தனபாலனை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் தனபாலன் மீது ஹாலா பிளாக் கல்லை தூக்கிப்போட்டது யார்? என்று அந்தபகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் போட்டுப்பார்த்தனர். அப்போது தனபாலன் மீது ஹாலோ பிளாக் கல்லை தூக்கிப்போட்டு விட்டு சிவக்குமார் வெளியே வருவது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிவக்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.