விசாரணைக்கு வந்த இடத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியரை தாக்கி பாலியல் தொல்லை 3 போலீசார் மீது வழக்குப்பதிவு

பெங்களூருவில், விசாரணைக்கு வந்த இடத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியரை தாக்கிவிட்டு அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கேரளாவை சேர்ந்த 3 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-06-06 22:20 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில், விசாரணைக்கு வந்த இடத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியரை தாக்கிவிட்டு அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கேரளாவை சேர்ந்த 3 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை

பெங்களூரு விவேக் நகரில் உள்ள விக்டோரியா லே-அவுட்டில் அமைந்து இருக்கும் தனியார் நிறுவனத்தில் வரவேற்பாளராக பணி செய்து வருபவர் 22 வயது இளம்பெண். இந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளரான பின்னிதாமஸ் கேரளாவில் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், மோசடி தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் பின்னி தாமசிடம் விசாரணை நடத்த கேரளாவை சேர்ந்த போலீசார் அந்த நிறுவனத்துக்கு வந்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணா தலைமையிலான போலீஸ் குழுவில் இருந்த 3 போலீசார் பின்னிதாமஸ் நிறுவனத்தில் பணி செய்த பெண் ஊழியரிடம், பின்னிதாமசை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதை கேட்ட அந்த பெண் ஊழியர் சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறியதோடு, போலீஸ் வந்திருக்கும் தகவலை பின்னிதாமசிடம் கூற முயன்றார். இந்த வேளையில், கோபமடைந்த 3 போலீசாரும், பெண் ஊழியரை திடீரென்று தாக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

3 போலீஸ்காரர்கள் மீது வழக்கு

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் உடனடியாக பின்னி தாமசின் அறைக்கு சென்றார். அப்போது, அவரை பின்தொடர்ந்து சென்ற 3 போலீசாரும் அவரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பெண் ஊழியர் சம்பவம் குறித்து விவேக் நகர் போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கேரளாவை சேர்ந்த 3 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், விசாரணைக்கு ஆஜராகும்படி அவர்களுக்கு நோட்டீசு அனுப்பி போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்