மந்திரி பதவி கிடைக்காததால் ஆத்திரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் போராட்டம் கர்நாடகம் முழுவதும் நடந்தது
மந்திரி பதவி கிடைக்காததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் நேற்று மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பெங்களூரு,
மந்திரி பதவி கிடைக்காததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் நேற்று மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
எம்.எல்.ஏ.க்கள் ஏமாற்றம்
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. மேலும் நேற்று மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 12 இடங்களும் என பங்கீடு செய்யப்பட்டது. இதில் முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றுக் கொண்டதால், ஜனதா தளம்(எஸ்) கட்சியில் மீதி 11 மந்திரிகள் பதவி மட்டுமே இருந்தன. அதேபோல் துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வர் பதவி ஏற்றுக் கொண்டதால், காங்கிரஸ் கட்சியில் 21 மந்திரி பதவிகள் மட்டுமே இருந்தன. இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் இன்னும் 6 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதற்கிடையே, காங்கிரசில் மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த பல்வேறு எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு பதவி கிடைக்காததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
குறிப்பாக மைசூரு மாவட்டம் நரசிம்மராஜா தொகுதியில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட தன்வீர்சேட்டுக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியும், ஆத்திரமும் அடைந்தனர். மேலும் நேற்று மதியம் பெங்களூரு-மைசூரு சாலையில் அவர்கள் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். மேலும் தன்வீர்சேட்டின் ஆதரவாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றினார்கள். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.
காங்கிரஸ் அலுவலகம் முன்பு...
இதுபோல, பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் முன்பாக எம்.எல்.ஏ.க்களான ஹாரீஸ் மற்றும் எம்.டி.பி.நாகராஜ் ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைக்காததை கண்டித்து, அவர்களுடைய ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். மேலும் பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி கிடைக்காததால், அவரது ஆதரவாளர்கள் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதவிர விஜயாப்புராவில் எம்.பி.பட்டீலின் ஆதரவாளர்களும், தாவணகெரேயில் சாமனூர் சிவசங்கரப்பாவின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் குதித்தார்கள். அவர்கள் எம்.பி.பட்டீல் மற்றும் சாமனூர் சிவசங்கரப்பாவுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கோஷம் போட்டனர்.
கவுன்சிலர்கள் ராஜினாமா
காங்கிரஸ் மூத்த தலைவரான கதக் மாவட்டத்தை சேர்ந்த எச்.கே.பட்டீல், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கிராம வளர்ச்சி துறை மந்திரியாக இருந்தார். இந்த முறை தனக்கு எப்படியும் மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. இதனால் எச்.கே.பட்டீலும், அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர். எச்.கே.பட்டீலுக்கு மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்று கதக் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் எச்.கே.பட்டீலுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கதக் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு மந்திரி பதவி கிடைக்காததால், அவர்களுடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்திருப்பதும், மந்திரி பதவி கேட்டு போர்க்கொடி தூக்கி இருப்பதும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.