நீலகிரி மலைப்பகுதியில் தொடர் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீலகிரி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர்,
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணையாகும். 120 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சகதி 15 அடி போக 105 அடிக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அணையில் இருந்து பிரிக்கப்படும் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காலிங்கராயன், கீழ்பவானி வாய்க்கால் மூலமாக மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி மக்களின் குடிநீர் தேவையையும் பவானிசாகர் அணை தண்ணீரே பூர்த்தி செய்கிறது. நீலகிரி மலைப்பகுதியே பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும்.
கடந்த சில மாதங்களாக நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் குறைந்துகொண்டே வந்தது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 691 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 54.04 அடியாக இருந்தது.
நேற்று காலை 8 மணி அளவில் நீர்வரத்து உயர்ந்து வினாடிக்கு 1,732 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 54.49 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்காலுக்கு வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. அதே நேரம் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. அதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் என்று நம்பப்படுகிறது.