சென்னம்பட்டி வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து மணல் கடத்தியதாக 4 பேருக்கு ரூ.6 லட்சம் அபராதம்: வன ஊழியர்கள் 3 பேர் பணியிட மாற்றம்
சென்னம்பட்டி வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து மணல் கடத்திய 4 பேருக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக வன ஊழியர்கள் 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.;
அம்மாபேட்டை,
அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்தில் ஜர்த்தல் ஏரி உள்ளது. மழை காலங்களில் வண்டல் மண் மற்றும் மணல் தண்ணீரோடு இந்த ஏரிக்கு வந்து சேரும்.
இதனால் ஏரியில் யாரும் மணல் அள்ளி கடத்தாமல் இருக்க வனத்துறையினர் அவ்வப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இந்நிலையில் ஜர்த்தல் ஏரியை ஒட்டி பாப்பாத்திகாடு புதூர் அருகே கூப்புக்காடு என்ற இடத்தில் சுமார் 75 லோடு மணல் கடத்துவதற்காக குவியலாக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. வனப்பகுதிக்குள் வெளிநபர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாது என்பதால், இந்த சம்பவத்தில் வன ஊழியர்களுக்கு தொடர்பு இருக்குமோ? என்று பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தநிலையில் மணல் குவியல் சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட வனத்துறை அதிகாரி விஸ்மிஜூ விஸ்வநாதன் தீவிர விசாரணை நடத்தினார். அதில் சென்னம்பட்டி அருகே உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 30), கொமராயனூரை சேர்ந்த கணேசன் (63), அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி (45), கனகராஜன் (34) ஆகியோர் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து ஜர்த்தல் ஏரியில் டிராக்டர் மூலமாக திருட்டுத்தனமாக மணல் அள்ளியதும், அவர்கள் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்த கூப்புக்காடு பகுதியில் மணலை குவித்து வைத்து இருந்ததும் தெரிந்தது. அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் மணல் கடத்தியதை ஒப்புக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து சுந்தர்ராஜன், கணேசன், முத்துசாமி, கனகராஜன் ஆகிய 4 பேருக்கும் தலா 1½ லட்சம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக வசூல் செய்யப்பட்டது. மேலும் கடத்திய மணலை அதே இடத்தில் கொண்டுவந்து கொட்டவும் உத்தரவிடப்பட்டது.
இது தவிர வனத்துறைக்குள் வெளியாட்கள் நுழைந்து மணல் கடத்தும் வரை பணியில் கவனக்குறைவாக இருந்ததாக குருவரெட்டியூர் பிரிவு வனவர், கொமராயனூர் தெற்கு பீட் வனக்காப்பாளர், வனக்காவலர் என 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.