காட்டு யானைகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

காட்டு யானைகளை தொந்தரவு செய்தால் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Update: 2018-06-06 21:45 GMT

குன்னூர்,

குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான காடுகளும், தனியாருக்கு சொந்தமான காபி தோட்டங்களும் உள்ளன. தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக பலாமரங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் இந்த பலாப்பழங்களை சாப்பிடுவதற்காக யானைகள் கூட்டம் கூட்டமாக குன்னூருக்கு படையெடுத்து வருகின்றன.

சமவெளி பகுதியில் இருந்து வரும் யானைகள் பர்லியார், கே.என்.ஆர். நகர், மரப்பாலம் போன்ற பகுதிகளுக்கு வருவது உண்டு. இந்த ஆண்டு கடந்த மே மாதத்திலேயே பலா மரங்களில் பலாப்பழங்கள் பழுக்க தொடங்கி விட்டன. இதனால் சமவெளி பகுதியில் இருந்து வந்த 6 காட்டு யானைகள் பர்லியார் கே.என்.ஆர். நகர் போன்ற பகுதிகளில் முகாமிட்டு இருந்தன. தற்போது இவைகளில் 3 யானைகள் பிரிந்து கே.என்.ஆர். நகர் பகுதியில் முகாமிட்டு உள்ளன.

நேற்று முன்தினம் மாலை கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த காட்டு யானை ஒன்று உணவு தேடி கே.என்.ஆர்.–பர்லியார் இடையே உள்ள சாலையை கடந்து சென்றது. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்து நடுவழியிலேயே வாகனங்களை நிறுத்தினார்கள். அந்த யானை சாலையை கடந்த பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் அடிக்கடி சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:– பலாப்பழங்களை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக குன்னூருக்கு படையெடுத்து வருகின்றன. காட்டு யானைகள் குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையை கடந்து செல்லும் போது சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது வாகனங்களில் இருந்து கீழே இறங்கி அதனை புகைப்படம் எடுத்து வருகிறார்கள். சிலர் யானையின் அருகே நின்று செல்பி எடுக்கிறார்கள். இது சுற்றுலா பயணிகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும். காட்டு யானைகளை தொந்தரவு செய்யும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்