ஊத்துக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு

ஊத்துக்கோட்டை அருகே தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதால் மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2018-06-06 23:15 GMT

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள உப்பரபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவர் தன்னுடைய வயலில் நாற்று நடவு பணிகளுக்காக ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள கண்ணாவரம் பகுதியில் இருந்து 25 பெண் தொழிலாளர்களை அழைத்து வந்தார். நேற்று முன்தினம் காலை முதல் மதியம் வரை பெண் தொழிலாளர்கள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் மதிய உணவு அருந்திய பின்னர் மீண்டும் நாற்று நடவு பணி தொடங்கினர். உப்பரபாளையம் பகுதியில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது கோபி வயல் பகுதியில் இருந்த மின்கம்பம் சாய்ந்ததால் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கி கொண்டிருந்தன. இது குறித்து கோபி ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் தெரியப்படுத்தியும் மின்கம்பம் சீரமைக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோபியின் வயலில் நாற்று நடவு பணியில் ஈடுபட்டிருந்த முனியம்மாள் (வயது 50) என்ற பெண் மீது தாழ்வாக தொங்கி கொண்டிருந்த மின் கம்பி உரசியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்