ஒரே நாளில் மூன்று இடங்களில் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

புதுக்கோட்டை பகுதியில் ஒரே நாளில் மூன்று இடங்களில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-06-06 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை டவுன் லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சர்மிளா. ராஜா சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சர்மிளா தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் மூத்த மகனை பெங்களூருவில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதற்காக சில தினங்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இவரது இளைய மகன் அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

நேற்று காலை இளையமகன் கோகுல் தனது வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போய் இருப்பது தெரியவந்தது. மேலும் பெங்களூருக்கு சென்றுள்ள சர்மிளா ஊருக்கு வந்த பிறகு தான் திருடு போன பொருட்களின் உண்மையான மதிப்பு தெரியவரும். இது குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதேபோல் புதுக்கோட்டை டவுன் டைமன் நகரை சேர்ந்தவர் வீரமணி(44). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு நமணசமுத்திரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார் பின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க செயின், கம்மல் என 5 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து வீரமணி டவுன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் செல்லும் வழியில் ராசம்பட்டியை சேர்ந்தவர் மதிவாணன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை பகுதியில் ஒரே நாளில் மூன்று இடங்களில் நடந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்