பிரதீபாவின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட பிரதீபாவின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2018-06-06 23:00 GMT
மேல்மலையனூர்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருவளுர் கிராமத்தை சேர்ந்த மாணவி பிரதீபா நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலுக்கு நேற்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கையால் ஏழை மாணவர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள். கடந்த ஆண்டில் இருந்தே நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என தமிழகத்தில் உள்ள மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், அரசியல் கட்சியினர் போராடி வருகின்றனர்.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. அவசர சட்டம் போட்டால் விலக்கு அளிப்போம் என்று தெரிவித்தனர். ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஒரு மாநிலத்துக்காக விலக்கு அளிக்க முடியாது என்று தீர்ப்பு கூறப்பட்டது. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யும் வரையில் சமூக நீதி போராட்டத்தை தொடர்வதை தவிர வேறுவழியில்லை.

இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து முத்தரசன், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செஞ்சி மேல்சேவூரை சேர்ந்த மாணவி கீர்த்திகாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், பிரதீபா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், நீட் தேர்வு தமிழகத்தில் பலரை பலி வாங்கி கொண்டு இருக்கிறது. பிரதீபாவுக்கு நீட்தேர்வால் டாக்டர் படிக்க இடம் கிடைக்கவில்லை. நீட்தேர்வு வேண்டாம் என்று காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்த்து வருகிறோம். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது நீட் தேர்வுக்கு அவரால் விதிவிலக்கு பெற முடிந்தது. ஆனால் தற்போது நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நம்பிக்கையுடன் மாணவர்கள் தேர்வை எதிர்கொண்டனர். மாணவ- மாணவிகளுக்கு ஏமாற்றம் ஏற்படும் போது உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது. பிரதீபா மரணம் தற்கொலை கூட அல்ல அவர் கொலை செய்யப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவரது மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதீபா குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். குறைந்தபட்சம் சில ஆண்டுகளாவது நீட் தேர்வை மத்திய அரசு தள்ளி வைக்க வேண்டும் என்றார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதீபா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த நாடு கல்வியை வியாபாரமாக்கி விட்டது. இதனால் மாணவர்கள் பிடித்ததை படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எந்தஒரு மனிதனும் காதல் மற்றும் தொழிலில் தோற்கலாம். ஆனால் லட்சியத்தில் தோற்கக்கூடாது. லட்சியத்தை அடைய முடியாததால் தான் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இது சமூக கொடுமை, தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றார்கள். அங்குள்ள துணிவு ஏன் இங்கு இல்லை. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும்.

இவ்வாறு சீமான் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பிரதீபா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதிவிலக்கு வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தோம். ஆனால் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. மாநில அரசும் விலக்கு பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதீபாவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும். தற்போது சட்டசபையில் முதல்-அமைச்சர் நீட் தேர்வை நாங்களும் எதிர்க்கிறோம் என்று கூறுகிறார். இது வெறும் வாய்பேச்சாக இருந்து விடக்கூடாது. சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு ஒப்புதல் வாங்கி தர வேண்டும் என்றார். 

மேலும் செய்திகள்