பாலீஸ் போடுவதாக கூறி பெண்ணிடம் நகை ‘அபேஸ்’ செய்த 2 பேர் கைது

ஆண்டிப்பட்டி அருகே பாலீஸ் போடுவதாக கூறி பெண்ணிடம் நகை ‘அபேஸ்’ செய்த பீகார் மாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-06 22:30 GMT
கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். அவருடைய மனைவி பிரீத்தி. இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரிடம், வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் தங்கநகைகளை பாலீஸ் போட்டு தருவதாக தெரிவித்துள்ளனர்.

இதை உண்மை என்று நம்பிய பிரீத்தியும், வீட்டில் வைத்திருந்த 25 பவுன் நகைகளை எடுத்து கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் பாலீஸ் செய்து கொடுத்தனர். பின்னர் தங்கநகைகளை சிறிது நேரம் வெயிலில் காய வைத்து எடுக்குமாறு கூறி விட்டு வீட்டை விட்டு சென்றனர்.

சிறிது நேரம் கழித்து காய வைத்த நகைகளை பார்த்தபோது, தங்கசங்கிலி ஒன்று நிறம் மாறி இருப்பதை கண்டு பிரீத்தி அதிர்ச்சி அடைந்தார். அதனை சோதனை செய்தபோது, கவரிங் நகை என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் பாலீஸ் போடுவது போல் நடித்து 10 பவுன் தங்கசங்கிலி ஒன்றை எடுத்து கொண்டு, கவரிங் நகையை மாற்றி கொடுத்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பீரித்தி அவர்களை தேடினார். அப்போது பக்கத்து தெருவில் பாலீஸ் போடுவதாக கூறி 2 பேரும் கூவி கொண்டிருந்தனர். இதையடுத்து பிரீத்தி பொதுமக்கள் உதவியுடன் 2 பேரையும் மடக்கி பிடித்து கண்டமனூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த சதீஷ்குமார் ஷா (வயது 32), முல்முல்குமார் (22) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் நகையையும் மீட்டனர். 

மேலும் செய்திகள்