சம்பளம் வழங்காததால் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை

சம்பளம் வழங்காததால் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-06 22:00 GMT

பரமக்குடி,

பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளை கொண்ட பெரிய நகரமாகும். இந்த பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள 70–க்கும் மேற்பட்ட ஆண், பெண் துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் மாத ஊதியமானது தாமதமாக நகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் துப்புரவு பணியாளர்கள் வெளிநபர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி குடும்பம் நடத்த வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் குடும்பத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை குறித்த நேரத்தில் வாங்க முடியாமலும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும் உள்ளனர். தற்போது மே மாதத்திற்குரிய ஊதியம் இன்னும் வழங்கப்படாததால் துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தேவையான சீருடைகள், நோட்டுகள், கல்வி கட்டணம் போன்றவற்றுக்கு பணம் இல்லாமல் அவதிக்குஉள்ளாகி வருகின்றனர்.

இதனால் அதிருப்தி அடைந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை முற்றுகையிட்டனர். பின்னர் நகராட்சி ஆணையாளரை சந்திக்க வந்தனர். அவர் இல்லாததால் மற்ற அலுவலர்களிடம் முறையிட்டனர். ஆனாலும் பயன் இல்லாததால் அவர்கள் அனைவரும் பல மணி நேரம் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு காத்துக்கிடந்தனர்.

மேலும் செய்திகள்