கட்டண கொள்ளையால் பாதியில் நிறுத்தப்பட்ட செங்கோட்டை–கோவை சிறப்பு ரெயில்கள்

ரெயில்வேயின் கட்டண கொள்ளையால், பயணிகளின் வரவேற்பை இழந்து செங்கோட்டை, நெல்லை–கோவை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்கள் குறிப்பிட்ட காலம் வரை முழுமையாக இயக்கப்படாமல் பாதியில் நிறுத்தப்பட்டன.;

Update: 2018-06-06 22:30 GMT

மதுரை,

தென்னக ரெயில்வேயில் தென்மாவட்டங்களுக்கான ரெயில் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. தென்னக ரெயில்வேயில் விதிமீறலில் ஈடுபடாமல் முறையாக பயணம் செய்யும் தென்மாவட்ட பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால், தென்மாவட்டங்களுக்கான திட்டங்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு காரணத்தால் நிறைவேற்றப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது.

குறிப்பாக சென்னையில் இருந்து மதுரை வரை இரட்டை அகல ரெயில்பாதை அமைப்பதற்கு கிட்டத்தட்ட சுமார் 40 வருடங்கள் ஆகியுள்ளது. ஆனால், தென்னக ரெயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள கேரள மாநிலத்தில் 3–வது ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல, தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரெயில்களின் பெட்டிகள் அனைத்தும் பயன்படுத்துவதற்கு தகுதியற்ற காலாவதியான பெட்டிகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மதுரை–சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இணைக்கப்பட்டுள்ள நவீன எல்.எச்.பி. பெட்டிகள் என்று சொல்லப்படும் பெட்டிகள் கூட மழை நேரங்களில் ஒழுக கூடியதாக உள்ளது. இதற்கு ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் கொடுக்கப்படும் விளக்கம் தான், ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 9–ந்தேதி முதல், கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. பின்னர், நெல்லைக்கு இயக்கப்பட்டது. இந்த ரெயில்கள்(06019,06020,06021,06022) வாரம் இருமுறை இயக்கப்பட்டன. மேலும், ரெயில்கள் வருகிற ஜூலை மாதம் 4–ந் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, கோவை–நெல்லை ரெயில் மே மாதம் 2–ந் தேதி, நெல்லை–கோவை எக்ஸ்பிரஸ் கடந்த 6–ந் தேதி, கோவை–செங்கோட்டை ரெயில் கடந்த 7–ந் தேதி முதல் திடீரென்று நிறுத்தப்பட்டன.

இந்த ரெயில்களில் முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், ரெயில்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கட்டண கொள்ளையால் தான் பயணிகள் இந்த ரெயிலுக்கு முன்பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, செங்கோட்டையில் இருந்து கோவைக்கு 2–ம் வகுப்பு முன்பதிவு கட்டணமாக ரூ.335, நெல்லையில் இருந்து ரூ.325 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டது. பொதுப்பெட்டிகளில் ரூ.128 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

இதில், முன்பதிவு கட்டணங்களை பொறுத்தமட்டில், செங்கோட்டையில் ஏறி, அடுத்து ரெயில் நிலையமான தென்காசியில் இறங்கினாலும், மதுரையில் இறங்கினாலும் ரூ.335 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அதாவது, எந்த ரெயில்நிலையத்தில் இருந்து ஏறினாலும் ஒரே கட்டணம் என்ற பெயரில் கட்டண கொள்ளையடிக்கப்பட்டது.

இதனால், பயணிகளிடம் இந்த ரெயில் போதிய வரவேற்பை பெறவில்லை. அதேசமயத்தில், நாகர்கோவிலில் இருந்து மதுரை, ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை செல்லும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2–ம் வகுப்பு முன்பதிவு கட்டணமாக நெல்லையில் இருந்து ரூ.305 மட்டுமே வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்