பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி: 2 வாலிபர்களை சுற்றி வளைத்து பொதுமக்கள் தாக்குதல்

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி செய்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததால் 2 வாலிபர்களை சுற்றி வளைத்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

Update: 2018-06-06 23:15 GMT
தஞ்சாவூர்,


தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் விரிவாக்க பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிள்களில் வரும் மர்மநபர்கள், தங்க சங்கிலியை பறித்து செல்லும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. மேலும் பூட்டியிருக்கும் வீடுகளை குறி வைத்தும் கொள்ளை நடக்கிறது. மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே நேற்றுகாலை 25 மதிக்கத்தக்க பெண் நடந்து சென்றபோது அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றுவிட்டனர். இவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நேற்றுபிற்பகல் தஞ்சை புதுக்கோட்டை சாலை ஓ.எம்.ராஜ் நகரில் 30 வயது மதிக்கத்தக்க பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்தனர். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியதால் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர்.

உடனே சுதாரித்து கொண்ட அந்த பெண், கீழே விழுந்தவர்களை பார்த்து திருடன்... திருடன்... என சத்தம்போட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். ஆனால் அப்பகுதி மக்கள், அவர்களை விரட்டி சென்று பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.


இந்த தகவலை அறிந்த தஞ்சை மருத்துவகல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்த 2 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை பெற்ற 2 பேரிடமும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் தஞ்சை எல்.ஐ.சி. காலனி 5–ம் தெருவை சேர்ந்த அஜித்(வயது21), ரெயில்வே காலனியை சேர்ந்த சதீஷ்(21) என்பதும், இவர்கள் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இவர்கள் மீது தங்க சங்கிலி பறிப்பு உள்பட வேறு வழக்குகள் ஏதும் இருக்கிறதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் சிகிச்சை பெறும் வார்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்