தியாகதுருகத்தில் மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; ஐ.டி.ஐ. மாணவர்கள் 3 பேர் பலி: பஸ்சை முந்திச்செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கிய பரிதாபம்
தியாகதுருகத்தில் மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் ஐ.டி.ஐ. மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ்சை முந்திச்செல்ல முயன்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகத்தில் மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் ஐ.டி.ஐ. மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ்சை முந்திச்செல்ல முயன்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மகன் பாலாஜி(வயது 19). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்(ஐ.டி.ஐ.) எலக்ட்ரீசியன் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த தங்கமணி மகன் சஞ்சய்(19), கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்த காசிலிங்கம் மகன் நரேந்திரசர்மா(19) ஆகியோரும் பாலாஜியுடன் படித்து வந்தனர்.
இந்த நிலையில் பாலாஜி உள்ளிட்ட 3 பேரும் நேற்று காலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக் குறிச்சி நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பாலாஜி ஓட்டினார். தியாகதுருகம் புறவழிச்சாலையில் புக்குளம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி பஸ்சை முந்தி செல்ல பாலாஜி முயன்றார். அப்போது எதிரே கள்ளக்குறிச்சியில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி, எதிர்பாராதவிதமாக பாலாஜி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்டு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த பாலாஜி, சஞ்சய், நரேந்திரசர்மா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான பாலாஜி உள்பட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்த பாலாஜி, சஞ்சய், நரேந்திரசர்மா ஆகியோரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து, பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே பழையூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மகன் அழகர்(26) என்பவரை கைது செய்தனர்.