இன்னும் ஒரு ஆண்டுக்குள் மராட்டியம் 100 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறும் மந்திரி ராம்தாஸ் கதம் பேச்சு

இன்னும் ஒரு ஆண்டுக்குள் மராட்டியம் 100 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறும் என மாநில சுற்றுச்சூழல் மந்திரி ராம்தாஸ் கதம் பேசினார்.

Update: 2018-06-05 23:00 GMT
மும்பை, 

இன்னும் ஒரு ஆண்டுக்குள் மராட்டியம் 100 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறும் என மாநில சுற்றுச்சூழல் மந்திரி ராம்தாஸ் கதம் பேசினார்.

பிளாஸ்டிக்குக்கு தடை

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களால் மராட்டியத்தில் அதிகளவில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட பைகள், தட்டுகள், டம்ளர்கள் உள்பட பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் விற்பனைக்கு கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் மராட்டியத்தில் தடை விதிக்கப் பட்டது.

இந்தநிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மும்பையில் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மராட்டிய சுற்றுச்சூழல் மந்திரி ராம்தாஸ் கதம் பேசியதாவது:-

பிளாஸ்டிக் இல்லாத மாநிலம்

மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2006-ம் ஆண்டு 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவை முறையாக அமல்படுத்தப்படவில்லை.

ஒருநாளைக்கு சுமார் 1200 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. அவற்றில் எவ்வளவு மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்பது நமக்கு தெரியாது. பிளாஸ்டிக் கழிவுகளால் பொதுமக்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் இதற்கு மேலும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இன்னும் ஒரு வருடத்தில் மராட்டியம் 100 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநிலத்தின் தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்