‘அரசியலில் ரஜினிகாந்த் வெற்றி பெற முடியாது’: கடலூர் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நடிகர் ராதாரவி பேச்சு

அரசியலில் ரஜினிகாந்த் வெற்றி பெற முடியாது என்று கடலூர் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நடிகர் ராதாரவி பேசினார்.

Update: 2018-06-05 23:00 GMT
கடலூர், 

தி.மு.க. தலைவர் கருணா நிதியின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடலூர் நகர தி.மு.க. சார்பில் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். நகர இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., நடிகர் ராதாரவி, மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நடிகர் ராதாரவி பேசியதாவது:-

தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் என்னை போல் மீண்டும் வருவார்கள். வைகோவும் தற்போது நம்மோடு கைகோர்த்து உள்ளார். வருகிற தேர்தலில் தி.மு.க.வில் யார் வேட்பாளராக நின்றாலும் அவர்களை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். அப்போது தான் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வருவார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 15 ஆண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் நாடு, மொழி காப்பாற்றப்படும். நடிகர்களை யாரும் நம்பி விடாதீர்கள். அவர்கள் பின்னால் செல்லாதீர்கள். ஜல்லிக்கட்டுக்காக மாணவ சமுதாயம் போராடி வெற்றி பெற்றது. அப்படிப்பட்ட மாணவர்கள் சினிமாகாரர்கள் பின்னால் சென்று விடாதீர்கள்.

காவிரி பிரச்சினைக்காக மு.க.ஸ்டாலின் திருச்சி முக் கொம்பில் இருந்து கடலூர் வரை பிரசார பயணம் மேற்கொண்டார். ஆனால் இதை பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சனம் செய்கிறார். தனியாக பாரதீய ஜனதா கட்சியால் தமிழகத்தை ஆட்சி செய்ய முடியாது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தியவர்களை தீவிரவாதிகள் என்று நடிகர் ரஜினிகாந்த் சொல்கிறார். ஆனால் சினிமாவில் மட்டும் போராட வேண்டும் என்கிறார். நடிகர் ரஜினிகாந்த்தால் அரசியலில் வெற்றி பெற முடியாது. அவரால் முதல்-அமைச்சர் ஆக முடியாது. மத்திய அரசுடன் சேர்ந்து அவர் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் வருகிற தேர்தலில் வெற்றி பெற போவது தி.மு.க. தான். முதல்-அமைச்சர் ஆவதற்கு தகுதியுள்ளவர் மு.க.ஸ்டாலின் தான். நடிகர் கமல்ஹாசனும் ஏதேதோ பேசி வருகிறார். நீட் தேர்வு வேண்டாம் என்றால் அதற்கு மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வர வேண்டும். இவ்வாறு நடிகர் ராதாரவி பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுந்தர், நகர அவை தலைவர் நாராயணன், பொருளாளர் சலீம், தலைமை கழக பேச்சாளர் வாஞ்சிநாதன், சாமிவேல் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெயசீலன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்