தண்டராம்பட்டு தாலுகாவில் நீர் பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்: குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தண்டராம்பட்டு தாலுகா அளவில் நடந்த குறைதீர்வுநாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
தண்டராம்பட்டு,
தண்டராம்பட்டு தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பரிமளா தலைமை தாங்கினார். கூட்டத்தில் தாசில்தார் சுப்பிரமணியன், சமூக நல தாசில்தார் இந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன் மற்றும் மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆனால் கல்வித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய துறை அதிகாரிகள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் தங்களை அலட்சியப்படுத்துவதாக கூறி விவசாயிகள் கண்டன குரல் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் ½ மணி நேரமாக கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:-
கடந்த 2016-17-ம் ஆண்டில் விவசாயிகள் நெல் பயிருக்கு கட்டிய இன்சூரன்ஸ் தொகை இதுவரை தரவில்லை. எனவே உடனே அந்த தொகையை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தனூர் அணையை தூர்வார அரசு முன்வரவேண்டும். தரடாப்பட்டு தடுப்பு அணை சேதமடைந்துள்ளதால் அந்த அணையில் தண்ணீரை தேக்க முடியவில்லை. எனவே தரடாப்பட்டு தடுப்பணையை சீரமைத்து அப் பகுதி மக்கள் பயனடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. எனவே நீர் பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம சேவை மைய கட்டிடங்கள் சரியாக இயங்குவதில்லை. கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள வேளாண்மை அலுவலக கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
வணக்கம்பாடியில் இருந்து தரடாப்பட்டு செல்லும் சாலையும், கண்ணகந்தலில் இருந்து பீமானந்தல் செல்லும் சாலையும் மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த இரு சாலைகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சீரமைக்க வேண்டும். மேற்கண்டவாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.