ஆரணியில் இடிந்து விழுந்த கடைகளை கலெக்டர் பார்வையிட்டார்

ஆரணியில் இடிந்து விழுந்த காய்கறி மார்க்கெட் கடைகளை கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டார்.

Update: 2018-06-05 22:45 GMT
ஆரணி, 

ஆரணி நகரில் காந்தி ரோட்டில் செயல்பட்டு வரும் நகராட்சிக்கு சொந்தமான காந்தி காய்கறி மார்க்கெட்டில் கடந்த 2-ந் தேதி 3 கடைகளின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 3 கடைகள் தரைமட்டமானது. இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் இணைந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

அதன்பேரில் நேற்று மாலை கலெக்டர் கந்தசாமி இடிந்து விழுந்த காய்கறி மார்க்கெட் கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காய்கறி வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கும்வரை தற்போதுள்ள இடிந்த பகுதியிலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் கடைகளை வைக்க வேண்டாம். பொதுமக்கள் நலன் கருதியும், வியாபாரிகள் நலன் கருதியும் வியாபாரம் செய்து கொள்ளுங்கள். வியாபாரிகளே தங்கள் பொறுப்பில் விரைவில் சீரமைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது தாசில்தார் (பொறுப்பு) கிருஷ்ணசாமி, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜார்ஜ், ஆரணி உதவி கலெக்டர் பானு, வட்டார வளர்ச்சி அலுவலர் கா.கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி பொறியாளர் கணேசன், நகராட்சி மேலாளர் நெடுமாறன், நகராட்சி வருவாய் ஆய்வாளர் தேவராஜ், காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து தச்சூர் ஊராட்சியில் மின்வாரிய அலுவலகம் பின்புறம் ஆரணி வட்டத்தில் உள்ள நரிக்குறவர்கள், இருளர் சமுதாயத்தினர் ஒரே இடத்தில் வசிப்பதற்கு தொகுப்பு வீடுகள் கட்டி தருவதற்கான இடங்களையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது வருவாய் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், சர்வேயர் கோகுல் உள்பட பலர் இருந்தனர்.

மேலும் செய்திகள்